கும்மிடிப்பூண்டி விவகாரம்: குழந்தையின் உடலில் கடுமையான பாதிப்பு..!- சென்னை அரசு மருத்தவமனை டீன்

சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை உயிரிழந்தார்.
கும்மிடிப்பூண்டி விவகாரம்: குழந்தையின் உடலில் கடுமையான பாதிப்பு..!- சென்னை அரசு மருத்தவமனை டீன்
Published on

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் பீகாரை சேர்ந்த 19வயது இளைஞர் 3 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது.

அப்பகுதியில் உள்ள முட்புதரில் பலத்த ரத்த காயத்துடன் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்த சிறுமியை மீட்டு, கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு, மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை உயிரிழந்தார்.

பின்னர், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு முடிந்த நிலையில் குழந்தையின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதற்கிடையே, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அதே பகுதியில் தங்கி வேலைபார்த்து வந்த பீகாரைச் சேர்ந்த பிபின் மஞ்சி (வயது19) என்பவரை மடக்கி பிடித்த பொது மக்கள் போலீசிடம் ஒப்படைத்தனர். போலீசார் பிபின் மஞ்சியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் டீன் அரவிந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கும்மிடிப்பூண்டி சிம்காட் அருகே பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 3 வயது குழந்தையை நேற்று இரவு 10.30 மணியளவில் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அப்போதே குழந்தையின் உடலில் சில இடங்களில் ரத்தப்போக்கு அதிகமாக இருந்தது.

பின்னர், நேற்று இரவு 11 மணிக்கு சில அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. குழந்தைக்கு மலவாயில் பகுதியில் கடுமையான பாதிப்பு இருந்ததால், குடலின் ஒரு பகுதியை தற்காலிகமாக வெளியேற்றும் நடைமுறை மேற்கொள்ளப்பட்டது.

எனினும், அதிகாலை 4.30 மணி அளவில் குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. காலை 7 மணியளவில் சுவாசம் நிற்கும் நிலை ஏற்பட்டதால், காலை 7.30 மணிக்கு குழந்தை உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

பிரேதப் பரிசோதனை அறிக்கை விவரங்களை விரைவில் காவல்துறையிடம் ஒப்படைக்க உள்ளோம். குழந்தை உயிரிழந்ததையடுத்து கொலை வழக்காக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com