நீட் தேர்வில் இருந்து தமிழகம் விலக்கு பெறுவதில் அரசு உறுதியாக உள்ளது- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

உள்துறை அமைச்சகத்தின் கேள்விகளுக்கு தமிழக அரசு பதில் அளித்துள்ளது.திருமங்கலம் அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆய்வு.
(கோப்பு படம்)
(கோப்பு படம்)
Published on

 திருமங்கலம்:

மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு ஓமியோபதி மருத்துவக்கல்லூரியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:

தற்போது இந்த ஓமியோபதி கல்லூரியில் 300 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். 7 ஏக்கர் பரப்பளவில் இந்த கல்லூரி அமைந்துள்ளது. கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டதால் கல்லூரி தாழ்வான பகுதியாகி விட்டது.

இதனால் மழைக்காலங்களில் மாதக்கணக்கில் மழைநீர் தேங்கி நிற்கிறது. கல்லூரி கட்டிடங்கள், வகுப்பறைகள், ஆய்வகம் ஆகியவை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து ஆய்வு செய்வதற்காக, கலெக்டர் தலைமையில் தியாகராஜர் பொறியியல் கல்லூரியை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டு 10 தினங்களுக்குள் இந்த இடத்தில் ஆய்வு நடத்த உள்ளனர்.

ஆய்வறிக்கையின்படி மழை காலங்களில் தண்ணீர் தேங்கி கட்டிடத்திற்கு சேதம் ஏற்படும் என தெரிய வந்தால், புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்படும். இதற்கு கல்லூரி நிர்வாகம் மாணவப் பிரதிநிதிகள் உள்ளாட்சி அமைப்பினர் மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் பெற்று இந்த முடிவு செய்யப்படும்.

அவர்கள் அளிக்கும் அறிக்கையின் படி ரூ.60 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிட வளாகம் கட்டப்படும். அந்தப் பணிகள் நிறைவடைய சுமார் 2 ஆண்டுகள் ஆகும்.

அதுவரை கல்லூரியில் படிக்கும் மருத்துவ மாணவர்களின் படிப்பு பாதிக்காத வகையில் அருகே உள்ள விருதுநகர் மற்றும் திண்டுக்கல் பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரியில் இடம் கேட்க இந்திய மருத்துவ கவுன்சில் ஆணையாளரின் அனுமதி பெறும்படி வலியுறுத்தியுள்ளேன்.

நீட் தேர்வில் இருந்து தமிழகம் விலக்கு பெறுவதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் சில கேள்விகளை கேட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய தமிழகத்தை சேர்ந்த மருத்துவ மாணவர்கள் படிப்பை தொடர்வது குறித்து உதவ வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com