கோகுல்ராஜ் கொலை வழக்கு: திருச்செங்கோடு கோவிலில் 22-ந்தேதி ஐகோர்ட்டு நீதிபதிகள் நேரில் ஆய்வு

கோகுல்ராஜ் கடைசியாக இருந்ததாக சி.சி.டி.வி.யில் பதிவான திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயிலுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.நீதிபதிகளின் அறிவிப்பை தொடர்ந்து கோகுல்ராஜ் கொலை வழக்கு மீண்டும் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
கோகுல்ராஜ் கொலை வழக்கு: திருச்செங்கோடு கோவிலில் 22-ந்தேதி ஐகோர்ட்டு நீதிபதிகள் நேரில் ஆய்வு
Published on

சென்னை:

சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த தலித் இளைஞர் பொறியாளர் கோகுல்ராஜ். இவர் கடந்த 2015-ம் ஆண்டு, நாமக்கல் மாவட்டம், தொட்டிபாளையம் பகுதியில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். கோகுல்ராஜ், சுவாதி என்ற பெண்ணை காதலித்ததாகவும், இந்த விவகாரத்தில் அவர் ஆணவக்கொலை செய்யப்பட்டதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கோகுல்ராஜ் கொலை வழக்கு, உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில், மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டது.

இந்த வழக்கில், கைதான யுவராஜ், அருண், குமார் என்ற சிவகுமார், சதீஷ்குமார், ரகு என்ற ஸ்ரீதர், ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு, கிரிதர் ஆகிய 10 பேருக்கும் சாகும் வரை சிறை தண்டனை விதித்தும், 5 பேரை விடுதலை செய்தும் மதுரை மாவட்ட நீதிமன்றம் கடந்த ஆண்டு மார்ச் 8-ம் தேதி தீர்ப்பளித்தது.

கோகுல்ராஜ் கொலை வழக்கில், மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றம் அளித்த இந்த தீர்ப்பை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும், ஆயுள் தண்டனையை ரத்து செய்யக்கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர்.

அதேபோல, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சங்கர் உள்ளிட்ட 5 பேர் சிறப்பு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கோகுல்ராஜின் தாயார் சித்ரா மற்றும் இந்த வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் முக்கிய சாட்சியான சுவாதி பிறழ் சாட்சியமாக மாறினார். இந்த வழக்கின் முக்கிய சாட்சியான சுவாதியிடம் விசாரித்தபோது வீடியோ காட்சிகளை ஒளிபரப்பி நீதிபதிகள் சில கேள்விகளை எழுப்பினர். அதற்கு அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் விசாரணை நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் சுவாதி மாறி மாறி சாட்சியம் அளித்ததாக கூறி, நீதிமன்றமே தாமாக முன்வந்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்தது.

கோகுல்ராஜ் கொலை வழக்கில் விசாரணை நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் பொய் சாட்சியம் கூறியும், பிறழ் சாட்சியமாக மாறியும் நீதிமன்றத்தை தவறாக வழிநடத்திய சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்து அதற்கான மெமோவை அவரது கணவரிடம் வழங்க உத்தரவிட்டனர்.

இந்த வழக்குகளை விசாரித்த நிதீபதிகள் இதை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றினர். இதையடுத்து, இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. சுவாதிக்கு பதிலாக அவரது கணவர் ஆஜரானார். சுவாதி கர்ப்பமாக இருப்பதால் ஆஜராக முடியாத நிலை உள்ளதாக சுவாதியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள், கோகுல்ராஜின் தாயார், அரசு தரப்பு மற்றும் சிபிசிஐடி தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் யுவராஜ் உள்ளிட்ட மேல்முறையீடுதாரர்கள் தரப்பு வாதங்களுக்காக வழக்கு விசாரணையை வருகிற 20-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

கோகுல்ராஜ் கடைசியாக இருந்ததாக சி.சி.டி.வி.யில் பதிவான திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயிலுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கோயிலின் அமைப்பை புரிந்து கொள்ளவும், உள்ளே செல்லும் வழி, வெளியே வரும் வழி ஆகியவை குறித்து புரிந்து கொள்வதற்காக வருகிற 22-ந்தேதி நேரடியாக சென்று ஆய்வு செய்யவுள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். நீதிபதிகளின் இந்த அறிவிப்பை தொடர்ந்து கோகுல்ராஜ் கொலை வழக்கு மீண்டும் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com