

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் 300-க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இவற்றில் பெரும்பாலும் வடமாநில தொழிலாளர்களே அதிக அளவில் வேலை செய்து வருகின்றனர்.
சிப்காட் பகுதியொட்டிய புதுப்பேட்டை கிராமத்தில் பீகார், உத்தர பிரதேசம், ஒடிசா, ஜார்கண்ட் உள்ளிட்ட பல்வேறு வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் குடும்பத்தோடும், தனியாகவும் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகின்றனர்.
நேற்று மாலை இந்த பகுதியில் வசித்த வடமாநில தம்பதியின் 3 வயது பெண் குழந்தை திடீரென மாயமானாள். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் சிறுமியை தேடி வந்தனர்.
அப்போது அப்பகுதியில் உள்ள முட்புதரில் மாயமான சிறுமி பலத்த ரத்த காயத்துடன் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தாள். மேலும் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது.
இதனையடுத்து சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக கும்மிடிப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது.
சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை அறிந்ததும் அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். அவர்கள் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அதே பகுதியில் தங்கி வேலைபார்த்து வந்த பீகாரைச் சேர்ந்த பிபின் மஞ்சி (வயது19) என்பவரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவனுக்கு தர்ம அடி கொடுத்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து பிபின் மஞ்சியை கைது செய்தனர். எனினும் கைதான வாலிபர் தங்கி இருந்த அறையில் மேலும் 4 பேர் இருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இருப்பதாகவும், இதற்கு காரணமான மற்றவர்களையும் கைது செய்ய வேண்டும் என்று கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி இன்று காலை உயிரிழந்தாள். இதையடுத்து சிறுமி வசித்து வந்த பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
கைதான வாலிபரை தனி இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, சிறுமி இறந்தது தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்கு பின்னரே கூட்டு பாலியல் வன்கொடுமை நடந்ததா? என்பது தெரியவரும். இதில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள விளக்கத்தில்,
சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவர் மட்டுமே ஈடுபட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
குற்றம்சாட்டப்பட்டவரும் பாதிக்கப்பட்ட சிறுமியும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இது குறித்த கூடுதல் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளது.