புழலில் மதுபோதை தகராறில் தொழிலாளி அடித்துக்கொலை: நண்பர் கைது

நண்பர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் மோதலாக மாறியது.போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியில் பதுங்கி இருந்த மணியை கைது செய்தனர்.
புழலில் மதுபோதை தகராறில் தொழிலாளி அடித்துக்கொலை: நண்பர் கைது
Published on

செங்குன்றம்:

புழல் அண்ணா நினைவு நகர் பிரதான சாலையை சேர்ந்தவர் சரவணன் (வயது33). பெயிண்டர். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த மணியும் (32) நண்பர்கள் ஆவர்.

நேற்று இரவு நண்பர்கள் இருவரும் புழலில் உள்ள ஒரு கடையில் மது அருந்தினர். பின்னர் போதை அதிகமானதும் இருவரும் தங்களது வீட்டிற்கு சென்று விட்டனர்.

இந்தநிலையில் நள்ளிரவு 12 மணி அளவில் மணி மீண்டும் மதுகுடிக்க நினைத்தார். இதையடுத்து அவர் நண்பர் சரவணன் வீட்டிற்கு சென்று மீண்டும் மதுகுடிக்க வருமாறு அழைத்தார். ஆனால் சரவணன் மதுகுடிக்க வரவில்லை என்று கூறியதாக தெரிகிறது.

இதனால் நண்பர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இது மோதலாக மாறியது.

ஆத்திரம் அடைந்த மணி அருகில் கிடந்த இரும்பு கம்பியால் சரவணனின் தலையில் பலமாக தாக்கினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரவணன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனால் அதிர்ச்சி அடைந்த மணி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் சரவணன் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து புழல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியில் பதுங்கி இருந்த மணியை கைது செய்தனர். அவரிடம் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com