கடந்த 5 வாரங்களில் 4 லாக்கப் மரணங்கள்... வாய்திறவாத முதலமைச்சர் விஜய்!

அஜித்குமார் லாக்கப் மரணத்திற்கு தவெக தரப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
கடந்த 5 வாரங்களில் 4 லாக்கப் மரணங்கள்... வாய்திறவாத முதலமைச்சர் விஜய்!
Published on

தமிழ்நாடு முதலமைச்சராக நடிகரும், தவெக தலைவருமான விஜய் பொறுப்பேற்று முழுமையாக மூன்று மாதங்கள் கூட ஆகாதநிலையில், கடந்த 5 வாரங்களில் மட்டும் தமிழ்நாட்டில் 4 காவல்துறை படுகொலை நடந்துள்ளது.

ஆனால் இதில் எந்த சம்பவத்திற்கு இதுவரை முதலமைச்சர் விஜய் பதிலளிக்காமல், மௌனம் காத்துவருகிறார்.

சென்னை இளைஞர்

விஜய் முதலமைச்சராக பதவியேற்று முழுதாக ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், ஜூன்.8ம் தேதி சென்னை நெசப்பாக்கத்தைச் சேர்ந்த 28 வயதான வெங்கடேசன் என்ற இளைஞர், குடித்துவிட்டு சாலையில் செல்பவர்களிடம் தகராறில் ஈடுபட்டதாக எம்.ஜி.ஆர். நகர் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

விசாரணைக்குப் பின் வீடு திரும்பிய வெங்கடேசன் மறுநாள் படுக்கையிலிருந்து எழவில்லை. இதனைத்தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர், ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். விசாரணையின்போது போலீசார் அவரைத் தாக்கியதாகவும், அதுவே அவரது மரணத்திற்குக் காரணம் என்றும் வெங்கடேசனின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஜூலையில் மட்டும் 3 சம்பவங்கள்

மாற்றுத்திறனாளி இளைஞர் இறப்பு

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள ஈத்தங்காட்டை சேர்ந்தவர் சபரிவர்மன் (வயது 33). மாற்றுத்திறனாளி வியாபாரியான இவர், அவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்ததாக கூறி, தென்தாமரைக்குளம் போலீசார் கடந்த ஜூலை.9-ந்தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விசாரணைக் கைதியாக வைக்கப்பட்டிருந்த இவர், ஜூலை.13ம் தேதி சிறையில் வைத்தே கொல்லப்பட்டார். அவரை சிறை வார்டன்கள் 3 பேர் மற்றும் 8 விசாரணை கைதிகள் சேர்ந்து கை கால்களை கட்டிப்போட்டு கொடூரமான முறையில் அடித்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மூன்றாவது மரணம்

சென்னையை அடுத்த சேலையூரைச் சேர்ந்த ஜானகிராமன் தெருவை சேர்ந்த பாலாஜி (44) என்பவர், தனது பெட்டிக் கடையில் தடை செய்யப்பட்ட குட்கா போதைப்பொருளை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இச்சூழலில் ஜூலை. 15ம் தேதி காலை இவருக்கு மாரடைப்பு வந்ததாக கூறி, காவலர்கள் அவரை சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு பாலாஜியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர். சிறைக்காவலர்கள் தாக்கியதிலேயே அவர் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நான்காவது உயிர்

நேற்று தூத்துக்குடியைச் சேர்ந்த 24 வயதான அருணாச்சலம் என்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம். தூத்துக்குடி தெற்கு காவல்துறையினரால் அவர் சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு அவர் உயிரிழந்துள்ளார். காவல்துறை அடித்தாக அவர் பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நான்கு மரணங்கள் தொடர்பாகவும் இதுவரை முதலமைச்சர் விஜய் வாய்திறக்கவில்லை. குறைந்தபட்சம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றுக்கூட தெரிவிக்கவில்லை.

இதே முதலமைச்சர் விஜய் கடந்த திமுக ஆட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கோயில் காவலாளி அஜித்குமார் மரணத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து, அவரது குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவியும் வழங்கினார். மேலும் இந்த சம்பவத்தை கண்டித்து தவெக தரப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com