குதிரை பேர வழக்கில் ஜாமின் பெற்றார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி!

காலை, மாலை காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமின் வழங்கியது நீதிமன்றம்.
குதிரை பேர வழக்கில் ஜாமின் பெற்றார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி!
Published on

தமிழக வெற்றிக் கழகத்தின் ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ இளையராஜாவிடம் பேரம்பேசி, தவெக ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்டோர் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் இருவருக்கும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கியது. மேலும், மறு உத்தரவு வரும் வரை காலையும், மாலையும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராக நீதிமன்றம் நிபந்தனை விதித்தது.

இதற்கிடையே, போலீசார் தங்களை துன்புறுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் இருவரும் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு விசாரணையின்போது, “முன் ஜாமின் வழங்கப்பட்டு இதுவரை இருவரும் சரணடையவில்லை; சரணடையாத பட்சத்தில் துன்புறுத்தக்கூடாது என எப்படி கோர முடியும்? என நீதிபதி கேள்வி எழுப்பியதுடன், இருவரது மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

நீதிமன்றம் ஜாமின் வழங்கிய நிலையில், பிணைத்தொகை செலுத்துவதற்காக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு இன்று ஆஜரானார்.

நீதிமன்ற உத்தரவிற்கிணங்க ஆஜரானதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம். நாளை முதல் திருவல்லிகேணி காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என தெரிவித்துள்ளது.

காலை 10.30 மணிக்கும், மாலை 5.30 மணிக்கும் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com