சத்தியமங்கலம் அருகே வனப்பகுதியில் தொடர்ந்து 3-வது நாளாக கொழுந்து விட்டு எரியும் காட்டுத்தீ

தொடர்ந்து காற்றின் வேகம் அதிகரித்து உள்ளதால் காட்டு தீயானது அருகே உள்ள வனப்பகுதிகளில் பரவியது. தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
சத்தியமங்கலம் அருகே வனப்பகுதியில் தொடர்ந்து 3-வது நாளாக கொழுந்து விட்டு எரியும் காட்டுத்தீ
Published on

சத்தியமங்கலம்:

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரங்கள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் யானை, மான், புலி, சிறுத்தை, கரடி உள்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. மேலும் அடர்ந்த வனப்பகுதியான இங்கு அரிய வகை மரங்கள் உள்பட செடி, கொடிகள் நிறைந்து காணப்படுகிறது.

இந்த நிலையில் மாவட்டத்தில் கடந்த 1 மாதமாக சுமார் 100 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தில் 107, 109 டிகிரி என வெயில் பதிவாகி வருகிறது.

இதனால் சத்தியமங்கலம் வனப்பகுதிகளில் வறட்சி நிலகிறது. மேலும் செடி, கொடி, மரங்கள் காய்ந்து ஒன்றோடு ஒன்று உரசி வருகிறது. இந்நிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் கோடை காலம் என்பதால் வெயிலின் தாக்கமும் காற்றின் மாறுபாடும் அதிகமாக காணப்படுகிறது. இதனால் மரங்கள் ஒன்றோடு ஒன்று உரசி காட்டுத்தீ ஏற்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் கம்பத்து ராயன் கிரிமலைப்பகுதியில் திடீரென தீ விபத்து தீப்பற்றி எரிந்தது. காட்டுத்தீயானது தொடர்ந்து மளமளவென பரவியதால் சுமார் 20 ஏக்கருக்கு மேல் காட்டு மரங்கள் எரிந்து நாசமாகியது. இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வனச்சரகர் பழனிச்சாமி தலைமையில் 20 பேர் கொண்ட குழுவுடன் சென்று கம்பத்து ராயன்கிரி மலையில் ஏற்பட்ட தீயை அனைத்தனர்.

தொடர்ந்து காற்றின் வேகம் அதிகரித்து உள்ளதால் காட்டு தீயானது அருகே உள்ள வனப்பகுதிகளில் பரவியது. இதையடுத்து தீ மெல்ல மெல்ல பரவி சத்தியமங்கலம் புளியங்கொம்பை மேல் பகுதியிலும் பெரியகுளம் மேல் உள்ள மலைப்பகுதியிலும் நேற்று காட்டுத்தீ பரவியது.

இதில் பல விதமான விலை உயர்ந்த மரங்களும், அரிய வகை மூலிகை செடிகளும் எரிந்து நாசமாகியது. காட்டு தீ பரவுவதால் அந்த பகுதியில் உள்ள வனவிலங்குகள் சத்தம் போட்டப்படியே அங்கும், இங்கும் திரிகிறது. வன விலங்குகளின் சத்தம் அதிகமாக உள்ளது என அடிவாரத்தில் உள்ள பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் இன்றும் 3-வது நாளாக சத்தியமங்கலம் அடுத்த வனப்பகுதிகளில் காட்டு தீ பரவி பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது. இந்த தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com