சென்னை விமான நிலையத்தில் இருந்து தாமதமாக புறப்பட்ட விமானங்கள்... பயணிகள் கடும் அவதி

நூற்றுக்கணக்கான பயணிகள் தங்கள் தூக்கங்களை தொலைத்து விட்டு சென்னை விமான நிலையத்தில் விடிய விடிய காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து தாமதமாக புறப்பட்ட விமானங்கள்... பயணிகள் கடும் அவதி
Published on

சென்னையில் இருந்து கொல்கத்தாவுக்கு நேற்று இரவு 7.40 மணிக்கு, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் புறப்பட வேண்டும். அந்த விமானத்தில் பயணம் செய்ய 148 பயணிகள் வந்திருந்தனர். ஆனால் விமானம் காலதாமதமாக புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. விமானம் எப்போது புறப்படும்? எதற்காக தாமதம் என்று எந்த தகவலும் பயணிகளுக்கு அறிவிக்கவில்லை. இதனால் பயணிகள் சென்னை விமான நிலையத்திலேயே விடிய விடிய காத்திருந்தனர். இதனால் அந்த விமானத்தில் பயணிக்க இருந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட பயணிகள், தங்கள் விமான பயணங்களை ரத்து செய்துவிட்டு, வீடுகளுக்கு திரும்பிச் சென்று விட்டனர். அதன் பின்பு, அந்த விமானம் சுமார் 8 மணி நேரம் தாமதமாக, இன்று அதிகாலை 4 மணிக்கு, சுமார் 110 பயணிகளுடன், சென்னையில் இருந்து கொல்கத்தா புறப்பட்டு சென்றது.

அதைப்போல் சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், நேற்று இரவு 9.25 மணிக்கு, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டும். அந்த விமானத்தில், சுமார் 120 பயணிகள் பயணம் செய்ய இருந்தனர். அந்த விமானமும், கால தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தாமதத்திற்கான காரணங்கள் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. அதன் பின்பு அந்த விமானம் நேற்று இரவு 11 மணி அளவில், சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதமாக, பெங்களூரு புறப்பட்டு சென்றது.

அதைப்போல் சென்னையில் இருந்து புனே செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், நேற்று இரவு 10.05 மணிக்கு, புறப்பட்டு செல்ல வேண்டும். அந்த விமானத்தில் பயணம் செய்ய 167 பயணிகள் வந்திருந்தனர். ஆனால் அந்த விமானமும் தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கான காரணங்கள் எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் அந்த விமானம் சுமார் 2 மணி நேரம் தாமதமாக, நள்ளிரவு 12 மணிக்கு, சென்னையில் இருந்து புனே புறப்பட்டு சென்றது.

இதைப் போல் சென்னை விமான நிலையத்தில், ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து,3 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானங்கள், ஒன்றரை மணி நேரத்தில் இருந்து, 8 மணி நேரம் வரை தாமதம் ஆனதால், நூற்றுக்கணக்கான பயணிகள், தங்கள் தூக்கங்களை தொலைத்து விட்டு, சென்னை விமான நிலையத்தில், விடிய விடிய காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் அவதி அடைந்த பயணிகள், ஏர் இந்தியா கவுண்டரில் கடும் வாக்குவாதங்களில் ஈடுபட்டனர். அப்போது நிர்வாகக் காரணங்களால், இந்த விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் செல்வதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கு இடையே இந்த விமானங்கள் தாமதம் குறித்து, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கேட்ட போது, சென்னைக்கு வரவேண்டிய இன்கம்மிங் விமானங்கள், தாமதமாக வந்துள்ளதால், இங்கிருந்து புறப்பட வேண்டிய விமானங்களும், தாமதமாக புறப்பட்டு சென்றுள்ளன. ஆனால் இன்கம்மிங் விமானங்கள் தாமதத்திற்கு என்ன காரணம்? என்பது தெரியவில்லை என்று கூறுகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com