கணவர் 2 குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண் கவுன்சிலர்- திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

பெண் கவுன்சிலர் கணவர், குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கணவர் 2 குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண் கவுன்சிலர்
கணவர் 2 குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண் கவுன்சிலர்
Published on

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே உள்ள தொங்குட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவரது மனைவி கார்த்திகா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கார்த்திகா தொங்குட்டிபாளையம் ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினராக உள்ளார்.

இந்தநிலையில் இன்று ஆனந்தகுமார் தனது மனைவி, குழந்தைகளுடன் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். கையில் மண்எண்ணை கேனை கொண்டு வந்திருந்த அவர் திடீரென மனைவி, குழந்தைகள் மற்றும் தன் மீது மண்எண்ணையை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.

இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மற்றும் போலீசார் விரைந்து சென்று ஆனந்தகுமார் தீக்குளிப்பு முயற்சியை தடுத்து நிறுத்தினர். பின்னர் 4 பேர் மீது தண்ணீரை ஊற்றினர்.

இதையடுத்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது வீட்டை அபகரிக்க முயல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி தீக்குளிக்க முயன்றதாக ஆனந்தகுமார் தெரிவித்தார். பின்னர் அவர் கலெக்டரிடம் மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது :-

தொங்குட்டிபாளையம் ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினராக எனது மனைவி கார்த்திகா உள்ளார். நாங்கள் தொங்குட்டிபாளையம் பகுதியில் 8 சென்ட் நிலம் மற்றும் வீட்டுடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறோம். இந்நிலையில் எங்கள் ஊரை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் 2பேர் எங்களது வீடு மற்றும் நிலத்தை போலியாக ஆவணம் தயாரித்து அபகரிக்க முயற்சி செய்து வருகிறார்கள்.

காலியாக உள்ள நிலத்தையும் பெயர் மாற்றம் செய்துள்ளனர். தற்போது எங்களை வீட்டை காலி செய்ய வற்புறுத்தி மிரட்டி வருகிறார்கள் .எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போலியாக அவர்கள் தயாரித்துள்ள ஆவணங்களையும் ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். 

X

Maalai Malar
www.maalaimalar.com