ஆம்னி பஸ்களில் 2 மடங்கு கட்டணம் உயர்வு- பயணிகள் கடும் அவதி

நாகர்கோவிலுக்கு செல்லவே ரூ.3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை வசூலிக்கப்பட்டது.தாம்பரம்-கடற்கரை- செங்கல்பட்டு மார்க்கத்தில் 50-க்கும் மேற்பட்ட மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஆம்னி பஸ்களில் 2 மடங்கு கட்டணம் உயர்வு- பயணிகள் கடும் அவதி
Published on

சென்னை:

தாம்பரம் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் தாம்பரம்-கடற்கரை- செங்கல்பட்டு மார்க்கத்தில் 50-க்கும் மேற்பட்ட மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் திருச்சி, மதுரை, நெல்லை போன்ற தென் மாவட்டங்களுக்கு செல்லும் சில தொலைதூர எக்ஸ்பிரஸ் ரெயில்கள் செங்கல்பட்டில் இருந்து புறப்பட்டு சென்றன. அந்த ரெயில்களில் எழும்பூர், மாம்பலம், தாம்பரம் ரெயில் நிலையங்களில் இருந்து ஏற வேண்டியவர்கள் மாநகர போக்குவரத்துக் கழக பஸ்களில் பயணித்தனர்.

மின்சார ரெயில்களும் பல்லாவரம் வரை இயக்கப்பட்டது. இதனால் மின்சார ரெயில்களில் சீக்கிரமாக சென்றுவிடலாம் என்று நினைத்தவர்களாலும் அது முடியவில்லை. எனவே பயணிகள் அரசு பஸ்கள் மற்றும் ஆட்டோ, கார்களில் படையெடுத்தனர்.

கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்கு சென்ற பயணிகளும் அதிக அளவில் சென்றதால் ஜி.எஸ்.டி.ரோடு முழுவதும் வாகன நெரிசலில் சிக்கி திணறியது.

குரோம்பேட்டையில் இருந்து செங்கல்பட்டு செல்வதற்கு 2 மணி நேரம் வரை ஆனதாக பயணிகள் தெரிவித்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆட்டோ டிரைவர்கள் கட்டணத்தை கடுமையாக உயர்த்தி வசூலித்தார்கள்.

போக்குவரத்து நெரிசல் அதிகம் இருந்ததை காரணம் காட்டி ஆட்டோ டிரைவர்கள் கிளாம்பாக்கத்துக்கு சவாரி வர மறுத்தனர். இதனால் அவர்கள் கேட்ட தொகையை கொடுத்து பயணித்தார்கள்.

அரசு பஸ்கள் போதிய அளவில் இல்லாததால் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் காத்திருந்த பயணிகள் இரவில் வேறு வழியில்லாமல் ஆம்னி பஸ்களை நாடினார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் இரு மடங்கு கட்டணம் வசூலித்தார்கள்.

வழக்கமாக சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு ரூ.700 முதல் ரூ.1500 வரை வசூலிக்கப்படும். நேற்று ரூ.3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை வசூலிக்கப்பட்டது.

தனி நபராக சென்றவர்கள் கட்டண உயர்வை கண்டு கொள்ளாமல் பயணித்தார்கள். ஆனால் குடும்பமாக சென்றவர்கள் மிகவும் அவதிப்பட்டார்கள்.

நேற்று இரவில் மதுரை செல்லவே ரூ.3,500 கட்டணம் வசூலித்தார்கள். அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆனாலும் இந்த மாதிரி அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்ந்து நடப்பதாக பயணிகள் தெரிவித்தனர்.

செயலிகளில் வெளிப்படையாக வெளியிடப்படும் கட்டணங்கள் அதிகமாக இருந்தால் மட்டும் ஒரு சில பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இது வெறும் கண் துடைப்பு நாடகம் என்றார் தஞ்சையை சேர்ந்த பயணி சிதம்பரம்.

அவர் சென்னையில் இருந்து தஞ்சாவூர் செல்ல ரூ.2,500 கொடுத்து டிக்கெட் வாங்கியதாக தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com