

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள சுபா தியேட்டரில் இன்று வெளியான 'ஜன நாயகன்' திரைப்படம் திரையிடப்பட்டது. முதல் நாள் காட்சியை காண ஏராளமான ரசிகர்கள் திரையரங்கிற்கு வருகை தந்தனர்.
இந்நிலையில், வழக்கமாக இல்லாத வகையில் திரைக்கு முன்பகுதியில் முள் வேலி (பேரிகேட்) அமைக்கப்பட்டிருந்தது. இதனால் திரைக்கு அருகில் சென்று கொண்டாட்டங்களில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.
திரைக்கு முன் முள் வேலி அமைக்கப்பட்டிருப்பதை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.
ரசிகர்களின் பாதுகாப்பு மற்றும் திரையரங்கின் சொத்துகளை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது.
இதனிடையே, பெரிய ஹீரோக்கள் யாருடைய படம் வந்தாலும் இதுபோன்று முள் வேலி சம்பவங்கள் சுபா திரையரங்கில் நடைபெறுவது வழக்கமாம். அந்த பதட்டத்தில் விஜய்யின் படம் என்பதால் அவரது ரசிகர்கள் ஆர்வத்தில் ஏதும் அசம்பாவிதங்களை செய்து விடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதனை திரையரங்க நிர்வாகிகள் செய்துள்ளனராம். இந்த விவகாரம் அறந்தாங்கி திரைப்பட ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.