தமிழகத்தில் 9 இடங்களில் கூட்டுறவு வங்கி தொடங்கி மோசடி- முக்கிய நிர்வாகி கைது

வங்கி அலுவலர்களை தலா ரூ.2 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை பணம் பெற்றுக்கொண்டு நியமித்ததும் தெரியவந்தது. பொதுமக்களிடம் இருந்து வைப்புத்தொகை, சேமிப்பு தொகை ஆகியவற்றை பெற்றும், அதிக வட்டி தருவதாக கூறி நிரந்தர வைப்புத்தொகைகளை பெற்றும் மோசடி செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் 9 இடங்களில் கூட்டுறவு வங்கி தொடங்கி மோசடி- முக்கிய நிர்வாகி கைது
Published on

சென்னை:

சென்னை அம்பத்தூர் லேடான் தெருவில் ஊரக மற்றும் வேளாண்மை விவசாயிகள் கூட்டுறவு வங்கி என்ற பெயரில் கடந்த ஓராண்டாக வங்கி ஒன்று இயங்கி வந்தது. இந்த வங்கியின் கிளைகள் மதுரை, விருதாச்சலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருவண்ணாமலை, சேலம் உள்பட 8 இடங்களில் இயங்கியது.

இந்த வங்கியின் தலைவராக சந்திரபோஸ் என்பவர் செயல்பட்டார். அவர் ரிசர்வ் வங்கி அங்கீகாரம் கொடுத்தது போன்று போலி சான்றிதழ் தயாரித்து இந்த வங்கியை தொடங்கியுள்ளார். இதுகுறித்து, ரிசர்வ் வங்கியின் உதவி பொது மேலாளர் சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில், கடந்த 5-ந் தேதி அந்த வங்கியின் தலைவர் சந்திரபோசை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து போலியான பதிவு சான்றிதழ், வங்கி ஆவணங்கள், படிவங்கள், முத்திரைகள் மற்றும் பென்ஸ் சொகுசு கார் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. வங்கி கணக்கில் இருந்த ரூ.56 லட்சத்து 65 ஆயிரத்து 336 முடக்கப்பட்டது.

வங்கி அலுவலர்களை தலா ரூ.2 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை பணம் பெற்றுக்கொண்டு நியமித்ததும் தெரியவந்தது. மேலும், போலியாக வங்கி கணக்கு புத்தகம், காசோலை, முத்திரைகள் மற்றும் படிவங்கள் பயன்படுத்தியதும், போலியான டெபிட் கார்டுகள் தயாரித்ததும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அதேபோல், பொதுமக்களிடம் இருந்து வைப்புத்தொகை, சேமிப்பு தொகை ஆகியவற்றை பெற்றும், அதிக வட்டி தருவதாக கூறி நிரந்தர வைப்புத்தொகைகளை பெற்றும் மோசடி செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் திறமையாக துப்புதுலக்கிய சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் நாகஜோதி மற்றும் அவரது குழுவினரை சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

பின்னர், அவர் நிருபர்களிடம் கூறும்போது, "போலியாக தொடங்கப்பட்டுள்ள இந்த வங்கியில் 3 ஆயிரம் பேர் கணக்கு தொடங்கியுள்ளனர். சென்னையில் மட்டும் 1,700 பேர் கணக்கு வைத்துள்ளனர். ரிசர்வ் வங்கி அதிகாரியின் புகாரின் பேரில் நடத்திய விசாரணையில் தான் இந்த மோசடி தெரியவந்தது. வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களிடம் இருந்து இதுவரை எந்த புகாரும் வரவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அதில் முக்கிய தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com