

தருமபுரி:
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், அவர் மனைவி மல்லிகா உள்ளிட்ட 11 பேர் மீது, வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தருமபுரி மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதுதொடர்பாக 10 ஆயிரம் பக்கங்கள் அடங்கிய குற்ற பத்திரிகையை லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த மே மாதம் தாக்கல் செய்தனர். பின்னர் இந்த வழக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
கடந்த மாதம் 6-ம் தேதி அன்று கே.பி.அன்பழகன் உள்ளிட்ட 11 பேரும் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், விசாரணை நவம்பர் 22-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின்னர் இன்று ஆஜாராக உத்தரவிட்டிருந்த நிலையில் இன்று அவரது உறவினர்கள் ரவிசங்கர், சரவணன், சரவணகுமார், மாணிக்கம், தனபால் ஆகிய 5 பேர் மட்டுமே விசாரணைக்கு ஆஜராகினர்.
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன் உள்ளிட்டோர் ஆஜராகவில்லை. இந்த வழக்கு விசாரணையை நீதிபதி வரும் ஜனவரி 19-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.