

ESIC அமைப்பு தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மருத்துவப் பராமரிப்பு, நோய்க்கால உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, ஊனமுற்றோர் உதவித்தொகை மற்றும் சார்ந்தோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு பலன்களை வழங்கி வருகிறது.
இந்த நிலையில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஊழியர்களின் மாநில காப்பீட்டுக் கழகம் (ESIC), காப்பீடு செய்யப்பட்ட நபரின் வாரிசு (IP) இடஒதுக்கீட்டின் கீழ், 2026-27 கல்வியாண்டிற்கான மருத்துவ சேர்க்கை விண்ணப்பங்களை அறிவித்துள்ளது.
இந்த சேர்க்கைத் திட்டம், தொழிலாளர்களின் மாநில காப்பீட்டுத் திட்டத்தின் (ESI) கீழ் உள்ள தொழிலாளர்களின் பிள்ளைகளுக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டது.
2026-27 கல்வியாண்டிற்காக காப்பீடு செய்யப்பட்ட நபரின் வாரிசு இடஒதுக்கீட்டின் கீழ் மொத்தம் 783 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் 22 மருத்துவ, பல் மருத்துவ மற்றும் செவிலியர் நிறுவனங்களில் உள்ள 695 MBBS இடங்கள், 28 BDS இடங்கள் மற்றும் 60 BSc நர்சிங் இடங்கள் அடங்கும்.
இந்த திட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் விண்ணப்பதாரர்கள், MBBS மற்றும் BDS படிப்புகளுக்கு ஆண்டு கல்விக் கட்டணமாக ரூ. 24,000-ம், BSc நர்சிங் படிப்புகளுக்கு ரூ. 10,000-ம் செலுத்த வேண்டும்.
இதற்கு தகுதி பெறுவதற்கு பெற்றோர்கள் ESI சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட காப்பீடு பெற்ற நபராக இருக்க வேண்டும் மற்றும் செப்டம்பர் 30, 2025 நிலவரப்படி ESI திட்டத்தில் பங்களிப்பாளராகவும் இருந்திருக்க வேண்டும்.
ஆண் விண்ணப்பதாரர்கள் மார்ச் 8, 2026 அன்று 21 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்கக்கூடாது. இருப்பினும் காப்பீடு செய்யப்பட்ட நபர்களின் திருமணமாகாத பெண் வாரிசுகளுக்கு இந்த வயது வரம்பு பொருந்தாது.
ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை கோரும் விண்ணப்பதாரர்கள், ESIC வழங்கிய செல்லுபடியாகும் காப்பீடு செய்யப்பட்ட சான்றிதழைப் பெற வேண்டும்.
காப்பீடு செய்யப்பட்ட நபரின் வாரிசு (IP) சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூன் 21, 2026 ஆகும்
பதிவேற்றத்தின் போது விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட புகைப்படங்கள், வயதுச் சான்று, NEET (UG) 2026 தேர்வு அனுமதி அட்டை மற்றும் பிற சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.