விவசாயியை ஒற்றை யானை மிதித்து கொன்றதால் பரபரப்பு- அடுத்தடுத்த சம்பவங்களால் மலை கிராம மக்கள் அச்சம்

ஒற்றை யானையை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யானை மிதித்து பலியான காலன்.
யானை மிதித்து பலியான காலன்.
Published on

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன . இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், காட்டெருமை உள்பட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன.

வனப்பகுதி

ஈரோடு வனப்பகுதியில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன, தற்போது வனப்பகுதியில் வறட்சியான சூழ்நிலை நிலவி வருவதால் உணவு, தண்ணீர் தேடி யானை கூட்டங்கள் வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் நுழையும் சம்பவமும், தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தும் சம்பவமும் அதிகரித்து வருகிறது,

இந்நிலையில் விவசாயி ஒருவரை ஒற்றை யானையை மிதித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த தலமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட ராமரணை மலை கிராமம் உள்ளது, இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் காலன் (60) விவசாயி, அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி இவரது வீடு மற்றும் சற்று தொலைவில் மாட்டு கொட்டகைகள் உள்ளன,

நேற்று இரவு வழக்கம் போல் மாடுகளுக்கு தீவனத்தை போட்டு விட்டு காலன் வீட்டுக்கு தூங்க வந்தார், நள்ளிரவில் திடீரென வீட்டின் அருகே உள்ள மாட்டு கொட்டகைகளில் இருந்து மாடுகள் அலறும் சத்தம் கேட்டது, இதனால் திடுக்கிட்டு எழுந்த காலன் வீட்டை விட்டு வெளியே வந்து மாட்டு கொட்டகை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

ஒற்றை யானை

அப்போது மாட்டு கொட்டகையில் அருகே ஒற்றை யானை இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். யானையிடம் இருந்து தப்பிக்க ஓட முயன்றார், அப்போது அந்த ஒற்றை யானை காலனைத் தாக்கி மிதித்தது, இதில் விவசாயி காலன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்த விவசாயிகள் ஒன்று திரண்டு பார்த்த போது ஒற்றை யானை வனப்பகுதியை நோக்கி சென்றதை கண்டனர். பின்னர் அங்கு சென்று பார்த்தபோது. காலன் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

வனத்துறை

இதுகுறித்து ஆசனூர் போலீசாருக்கும் மற்றும் தல மேல வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாரும் வனத்துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் காலன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

கிராம மக்கள்

நேற்று முன்தினம் கட்டிடத் தொழிலாளி ஒருவரை யானை மிதித்து கொன்ற நிலையில் இன்று விவசாயியை ஒற்றை யானை மிதித்து கொன்றது மலை கிராம மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வனத்துறையினர் அந்த ஒற்றை யானையை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com