போலீஸ் விசாரணைக்கு சென்ற டிரைவர் திடீர் மரணம்- அடித்து கொன்று விட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு

விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து சென்று போலீசார் தாக்கியதால் தான் வெங்கடேசன் உயிரிழந்ததாக அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
போலீஸ் விசாரணைக்கு சென்ற டிரைவர் திடீர் மரணம்- அடித்து கொன்று விட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு
Published on

சென்னை எம்.ஜி.ஆர் நகர், அடுத்த நெசபாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன், மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மகன் வெங்கடேசன்(வயது 28). டிரைவர் வேலை பார்த்து வந்தார்.

நேற்று மாலை வெங்கடேசன் அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றார். பின்னர் போதை தலைக்கு ஏறியதால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளிடம் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்ததும் எம்.ஜி.ஆர் நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூப்பாண்டித்துரை மற்றும் போலீசார் வெங்கடேசனை விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். பின்னர் அவரது பெற்றோருக்கு போலீசார் தகவல் தெரிவித்து வரவழைத்து கடிதம் எழுதி வாங்கிக் கொண்டு வெங்கடேசனை அனுப்பி வைத்தனர். வீட்டிற்கு சென்ற வெங்கடேசன் அறையில் படுத்து தூங்கினார்.

இந்த நிலையில் இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் வெங்கடேசன் எழவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் 108 ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்சில் வந்த ஊழியர்கள் பரிசோதித்தபோது வெங்கடேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி அறிந்ததும் எம்.ஜி.ஆர் நகர் போலீசார் விரைந்து வந்து வெங்கடேசனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கே.கே நகர் இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து சென்று போலீசார் தாக்கியதால் தான் வெங்கடேசன் உயிரிழந்ததாக அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் தீவிர விசாரணைநடத்தி வருகிறார்கள். போலீஸ் நிலையத்திற்கு சென்று திரும்பிய வாலிபர் திடீரென இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com