

தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது இரண்டு வார கால லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு, இன்று (ஜூலை.19)சென்னை திரும்பினார்.
மு.க.ஸ்டாலினின் பேரனும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியின் மகனுமான இன்பன் பட்டமளிப்பு விழாவிற்கு குடும்பத்தோடு திமுக தலைவர்கள் லண்டனுக்கு சென்றிருந்தனர்.
கடந்த ஜூலை 3-ஆம் தேதி மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் லண்டன் புறப்பட்ட நிலையில், பட்டமளிப்பு விழா முடிந்த பிறகு அங்கேயே சில நாட்கள் ஓய்வும் எடுத்தார்.
இந்த வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு திட்டமிட்டபடி இன்று அதிகாலை அல்லது காலை 7 மணி அளவில் அவர் சென்னை விமான நிலையம் வந்தடைவதாக இருந்தது. இதனால் சென்னை விமான நிலையத்தில் தி.மு.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் காலையிலேயே திரண்டு உற்சாக வரவேற்பளிக்கக் காத்திருந்தனர்.
ஆனால், லண்டனில் இருந்து அவர் வரவிருந்த விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டதால், வருகை தள்ளிப்போனது. இதனால் தொண்டர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்நிலையில் இரவு 9 மணியளவில் சென்னை வந்தடைந்தார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.