கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமம் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி- தருமபுரம் ஆதீனம் தொடங்கி வைத்தார்

பரசுராமர் விநாயகர் கோவிலில் பூஜை, சப்தகன்னிகள் பூஜை நடந்தது. வானத்தில் பவுர்ணமி நிலவு தோன்றியதும் முக்கடல் சங்கமம் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது.
முக்கடல் சங்கமம் மகா சமுத்திர ஆரத்தி நிகழ்ச்சியை தருமபுரம் ஆதின நெல்லை கட்டளை மடாதிபதி ஸ்ரீமத் திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள் தொடங்கி வைத்தபோது எடுத்த படம்.
முக்கடல் சங்கமம் மகா சமுத்திர ஆரத்தி நிகழ்ச்சியை தருமபுரம் ஆதின நெல்லை கட்டளை மடாதிபதி ஸ்ரீமத் திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள் தொடங்கி வைத்தபோது எடுத்த படம்.
Published on

கன்னியாகுமரி:

ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி குமரி மாவட்ட இந்து திருத்தொண்டர் பேரவை சார்பில் முக்கடல் சங்கமம் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி நிகழ்ச்சி கன்னியாகுமரி கடற்கரையில் நேற்று மாலை நடந்தது.

கன்னியாகுமரி சன்னதி தெருவில் உள்ள வேதபாட சாலையில் இருந்து மேளதாளத்துடன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் நடராஜர் எழுந்தருளி கடற்கரையில் பரசுராமரால் ஸ்தாபிக்கப்பட்ட விநாயகர் கோவிலுக்கு ஊர்வலமாக புறப்பட்டு வந்தார்.

தொடர்ந்து பரசுராமர் விநாயகர் கோவிலில் பூஜை, சப்தகன்னிகள் பூஜை நடந்தது. அதன் பிறகு கடல் மாதாவுக்கு சங்கல்ப பூஜை மற்றும் அபிஷேகங்கள் நடந்தது. சுமங்கலிப்பெண்கள் அகல்விளக்கு ஏற்றி கடல் அன்னைக்கு தீபம் காட்டினார்கள். அதன்பிறகு வானத்தில் பவுர்ணமி நிலவு தோன்றியதும் முக்கடல் சங்கமம் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு குமரி மாவட்ட இந்து திருத்தொண்டர் பேரவை தலைவர் வக்கீல் ராஜகோபால் தலைமை தாங்கினார். பொருளாளர் செந்தில், ஒருங்கிணைப்பாளர் அனுசியாசெல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது தருமபுரம் ஆதீனம் நெல்லை கட்டளை விடாதிபதி ஸ்ரீமத் திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள் தீபம் ஏற்றி முக்கடல் சங்கமம் மகா சமுத்திர ஆரத்தி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில் அர்ச்சகர் ராஜாமணி அய்யர் விக்னேஷ் தலைமையில் கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் அர்ச்சகர் சுரேஷ் முன்னிலையில் 5 சிவாச்சாரியர்கள் மற்றும் அர்ச்சகர்கள் 5 அடுக்கு தீபம் கொண்ட ராட்சத தீபாரதனைத்தட்டில் தீபம் ஏற்றி பவுர்ணமி நிலவை நோக்கி தீபம் காட்டி ஆராதனை செய்தனர். இதில் திரளான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இறுதியாக நிகழ்ச்சி பொறுப்பாளர்கள் முருகேஷ் ஜெயராம் உள்பட பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி மாவட்ட இந்து திருத்தொண்டர் பேரவையினர் செய்து இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com