

பக்தர்களால் "அம்மா" என்று அழைக்கப்பட்டவர் பங்காரு அடிகளார். ஆன்மிகப் பணியாற்றி வந்த பங்காரு அடிகளார் கடந்த ஓர் ஆண்டாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். கோவில் வளாகத்தில் உள்ள வீட்டில் இருந்தபடியே அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், நேற்று மாலை 5 மணி அளவில் பங்காரு அடிகளார் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
அவர் மரணம் அடைந்த செய்தி, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் பக்தர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. பக்தர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மேல்மருவத்தூர் குவிந்த வண்ணம் உள்ளனர்.
அதேபோல், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் பக்தகர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். பக்தர்கள் அனைவரும் கண்ணீர் சிந்தியபடி அஞ்சலி செலுத்த நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றனர்.
இதற்கிடையே புதுச்சேரி ஆளுநகர் தமிழிசை சவுந்தரராஜன், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்த உள்ளார்.