

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலின் உட்கோயிலாக அமைந்துள்ளது அருள்மிகு அருணகிரி இடுக்கு பிள்ளையார் கோயில். இந்த கோவிலில் சிறிய குகை போன்ற அமைப்பில் 3 வாசல்கள் உள்ளன. பின் வாசல் வழியாக ஒருக்களித்து படுத்தவாறு உள்ளே நுழைந்து, மெல்லமாக கைகளை ஊன்றியவாறு நகர்ந்து முன் வாசல் வழியாக வெளியே வரவேண்டும்.
குகை போன்ற பகுதியில் இருந்து வெளியே வந்த உடன் நந்தி இருக்கும். பக்தர்கள் நந்தி பகவானையும், இடுக்கு பிள்ளையாரையும் வணங்கி செல்கின்றனர். பெரும்பாலான கிரிவல பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று இடுக்கு பிள்ளையார் கோவில் குகையில் நுழைந்து வெளியே வழிபட்டு செல்கின்றனர்.
இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு ஆந்திராவை சேர்ந்த மணிக்குமார் (வயது 36) என்பவர் தனது குடும்பத்துடன் கிரிவலம் சென்றார். சுமார் 11 மணியளவில் இடுக்கு பிள்ளையார் கோவிலுக்கு மணிக்குமார் வந்தார். குகை வடிவத்தில் உள்ள கோவில் பகுதியில் படுத்தபடி நுழைந்தார். உடல் பருமன் அதிகம் என்பதால் குகையில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்தார்.
பின்னர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினார். இதனை கண்ட சக பக்தர்கள் மயங்கி கிடந்தவரை போராடி வெளியே கொண்டு வந்தனர்.108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் மணிக்குமார் வரும் வழியிலே இறந்துவிட்டதாக கூறினர். இதை கேட்ட மணிக்குமார் குடும்பத்தினர் கதறி அழுதனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலின் உட்கோயிலாக அமைந்துள்ள அருள்மிகு அருணகிரி இடுக்கு பிள்ளையார் (அரைஇடுக்கு முக்கூர்ணி பிள்ளையார்) கோயிலுக்குச் செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் நலனைக் கருத்தில் கொண்டு, கோயில் நிர்வாகம் சார்பில் முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பிரசித்தி பெற்ற இந்த இடுக்கு பிள்ளையார் கோயிலுக்குச் செல்லும் வழிப்பாதை மிகவும் குறுகிய அமைப்பைக் கொண்டதாகும். இதனால், அங்கு செல்லும் பக்தர்களுக்கு ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்கும் வகையிலும், அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் நோக்கிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, உடல்பருமன் உள்ளவர்கள், கடுமையான உடல்நலக்குறைவு உள்ளவர்கள், முதியவர்கள் மற்றும் சிறு குழந்தைகள் ஆகியோர் இடுக்கு பிள்ளையார் கோயிலின் குறுகலான வழிப்பாதைக்குள் சென்று வர அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்களின் பாதுகாப்பை மட்டுமே முதன்மையாகக் கொண்டு இந்த நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளதால், சுவாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அனைவரும் கோயில் நிர்வாகத்தின் இந்த அறிவிப்பிற்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\