

தமிழ்நாட்டில் பாலியல் குற்ற வழக்குகளை விசாரிக்கும் அனைத்து விசாரணை நீதிமன்றங்களும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தபின், வழக்குகளை 2 மாதங்களில் முடிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களிடம் 30 நாட்களில் வாக்குமூலம் பதிவு செய்து, ஓராண்டுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, காவல்துறையினரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்ற சட்டப்பிரிவை வலியுறுத்தி, மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றங்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை வெளியிடுமாறு உயர் நீதிமன்றம் பதிவாளர் ஜெனரலுக்கு உத்தரவிட்டது.
வழக்கிற்கு தேவையற்ற வாய்தாக்களை வழங்கக் கூடாது என்றும், மிகவும் விதிவிலக்கான காரணங்களுக்கு மட்டுமே எழுத்துப்பூர்வமாக பதிவு செய்து வாய்தா வழங்கலாம் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறையினரே குற்றங்களில் ஈடுபடும் சம்பவங்கள் இனி நடக்காமல் இருப்பதை தமிழ்நாடு டிஜிபி உறுதி செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைக் கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்புக் குழு, ஒவ்வொரு மாவட்டத்திலும் திட்டமிட்ட செயல்திறனுடன் செயல்படுவதை உறுதி செய்யுமாறும்,
போக்சோ வழக்குகளில் காவல்துறை முறையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், விசாரணை நீதிமன்றங்களில் சாட்சிகளை உரிய நேரத்தில் ஆஜர்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தொடர்ந்து கடலூர், திண்டுக்கல், மதுரை மற்றும் தூத்துக்குடியில் உள்ள நான்கு போக்சோ நீதிமன்றங்களுக்கு விரைவில் தலைமை நீதிபதிகளை நியமிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், ஒப்புதல் அளிக்கப்பட்டும் இன்னும் அமைக்கப்படாத மேலும் ஆறு போக்சோ நீதிமன்றங்களை அமைப்பது குறித்தும் மாநில அரசு விரைவில் முடிவெடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
திருவண்ணாமலைக்குச் சாமி தரிசனம் செய்ய வந்த ஆந்திராவைச் சேர்ந்த பெண் ஒருவரை, திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் இருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்தாண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விரைந்து விசாரிக்கக் கோரியும், தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள பாலியல் வழக்குகளின் விவரங்களைக் கோரியும் பாதிக்கப்பட்ட பெண் தொடர்ந்த பொதுநல வழக்கில்தான் சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.