சுந்தரனார் பல்கலைக் கழகத்திலேயே தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடமா?-சிபிஎம் சண்முகம் ஆவேசம்!

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மூன்றாம் இடம் தருவது சுந்தரனாருக்கு இழைக்கப்படும் பெரும் அவமரியாதை என சிபிஎம் சுட்டிக்காட்டியுள்ளது.
CPM Shanmugam
Published on

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடல் மூன்றாவதாகப் பாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பி.சண்முகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், எந்தவொரு நிபந்தனைகளுக்கும் அடிபணியாமல் தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து அரசு மற்றும் பல்கலைக்கழக நிகழ்வுகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்தை முதன்மையதாகப் பாடுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் எனக் வலியுறுத்தினார்.

பல்கலைக்கழக விழா சர்ச்சை:

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா வரும் 28ம் தேதி ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தலைமையில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில், மத்திய அரசின் ஆளுநர் மாளிகை விதிகளைச் சுட்டிக்காட்டி முதலில் 'வந்தே மாதரம்', இரண்டாவதாக 'தேசிய கீதம்', மற்றும் மூன்றாவதாகவே 'தமிழ்த்தாய் வாழ்த்து' பாடப்படும் எனப் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்திருந்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

எந்த நிபந்தனைக்கும் பணியக்கூடாது:

தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றிய மனோன்மணியம் சுந்தரனார் பெயரில் இயங்கும் பல்கலைக்கழகத்திலேயே, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மூன்றாம் இடம் தருவது அவருக்கு இழைக்கப்படும் பெரும் அவமரியாதை என சிபிஎம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதுகுறித்துப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பி. சண்முகம், "ஆளுநர் பங்கேற்கிறார் என்பதற்காகவே ஒரு மாநிலத்தின் மாநிலப் பாடலைப் பின்வரிசைக்குத் தள்ளுவது எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல.

ஆளுநர் மாளிகையின் இந்த அத்துமீறலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழ்நாடு அரசு எவ்வித நிபந்தனைக்கும் அடிபணியாமல் தமிழ்த்தாய் வாழ்த்து முதலாவதாகப் பாடப்படுவதை உறுதி செய்திட வேண்டும்" என்றார்.

தமிழ்நாடு அரசின் நீண்டகால நடைமுறை:

தமிழ்நாட்டின் அரசு நிகழ்ச்சிகள் மற்றும் கல்வி நிறுவன விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலாவதாகவும், நிறைவில் தேசிய கீதம் பாடப்படுவதும் பல தசாப்தகால மரபாகும். ஆளுநர் மாளிகை நிகழ்ச்சி முறையைக் காரணம் காட்டி, மாநிலப் பல்கலைக்கழகங்களிலும் இந்த மரபை மாற்றுவதற்குப் பல்வேறு அரசியல் கட்சிகளும் தமிழ் அமைப்புகளும் தொடர்ந்து எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com