கோவை கோனியம்மன் கோவில் உண்டியல் திருட்டு: அதிகாரிகள் உள்பட 7 பேர் அதிரடி சஸ்பெண்ட்!

திருவிழாவிற்கு வைத்திருந்த உண்டியலை மறைத்து அதில் இருந்த பணத்தை திருடியது அம்பலமாகியுள்ளது.
 Minister Ramesh
Published on

தமிழகத்தில் த.வெ.க. தலைமையிலான ஆட்சி அமைந்ததை தொடர்ந்து ஊழல் மற்றும் லஞ்சத்தை ஒழிப்பேன் என்று முதல்-அமைச்சர் விஜய் உறுதி அளித்தார். அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் யாராவது லஞ்சம் கேட்டால் கொடுக்க முடியாது என்று கூறுங்கள் என்று சமீபத்தில் முதலமைச்சர் விஜய் பொது மக்களுக்கு அறிவுறுத்தி இருந்தார். மேலும் அமைச்சர்களும் ஊழல் மற்றும் லஞ்சத்தை ஒழிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

கோவிலில் ஆய்வு:

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் சமீபத்தில் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று ஆய்வு நடத்தி முறைகேடாக பணம் வாங்கிக்கொண்டு பக்தர்களை சாமி தரிசனத்துக்கு அனுமதித்த கோவில் ஊழியர்கள் மற்றும் அர்ச்சகர்கள் மீது நடவடிக்கை எடுத்தார். இதேபோல் பல கோவில்களிலும் அவர் ஆய்வு செய்து முறைகேடுகளை தடுத்து வருகிறார். தமிழக அரசின் நடவடிக்கையால் ஊழல் மற்றும் லஞ்சம் குறைந்து இருப்பதாக பொதுமக்கள் மத்தியிலும் பரவலாக பேசப்படுகிறது.

கோவை கோவிலில் உண்டியல் பணம் திருட்டு:

இந்நிலையில் கோவையில் கோவில் உண்டியல் பணம் திருட்டு போன விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் 3 பேரை ‘சஸ்பெண்ட்' செய்து தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. கோவை நகரின் மையப் பகுதியில் பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவில் அமைந்துள்ளது.

இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கிறார்கள். கோனியம்மன் கோவில் வளாகத்தில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக மொத்தம் 9 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் திருவிழா விற்காக 6 சிறப்பு உண்டியல்கள் வைக்கப்பட்டிருந்தது.

இந்த 15 உண்டியல்களும் கடந்த 15-ந்தேதி அதிகாரிகள் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது. அப்போது ஒரு உண்டியலை அங்கு இருந்த சிலர் எண்ணாமல் மறைத்து வைத்திருந்ததையும், அதில் இருந்த பணம் ரூ.30 ஆயிரத்தை திருடிக் கொண்டதையும் சிலர் கண்டுபிடித்தனர். இந்த சம்பவம் கோவையில் பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரமேஷ் கோவிலுக்கு சென்று விசாரணை நடத்தினார். அதன்பிறகு இந்த சம்பவம் தொடர்பாக கோவில் செயல் அலுவலர் குமார் உக்கடம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர். விசாரணையில் திருவிழாவிற்கு வைத்திருந்த உண்டியலை மறைத்து அதில் இருந்த பணத்தை திருடியது அர்ச்சனை டிக்கெட் ஊழியர் பால சுப்பிரமணியன், அலுவலக உதவியாளர்கள் சரவணன், பிரதீப் குமார் மற்றும் பூசாரி கிருஷ்ணராஜ் ஆகியோர் என தெரியவந்தது.

ஊழிர்கள் கைது:

இதைத்தொடர்ந்து 4 ஊழியர்களும் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்களை போலீசார் கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவிலில் உள்ள ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

பின்னர் கைதான 4 ஊழியர்களும் உடனடியாக ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் மேலும் சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என கூறப்பட்டது. ஏனென்றால் கோவில் உண்டியல் திருட்டு நடந்து பல நாட்கள் ஆன நிலையில், அதை கண்டு பிடிக்காமல் அதிகாரிகள் இருந்துள்ளனர்.

சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆன பிறகு திருட்டு சம்பவம் வெளியில் தெரியவந்துள்ளது. எனவே கோவில் நிர்வாக பணியில் கவனக்குறைவாக இருந்ததாக கோனியம்மன கோவிலின் செயல் அலுவலர் குமார், இந்து சமய அறநிலையத்துறை கோவில் ஆய்வாளர்கள் ராம்குமார், உதய குமார் ஆகிய 3 பேரையும் சஸ்பெண்ட் செய்து இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்.

அதேபோன்று இந்த சம்பவம் தொடர்பாக கோனியம்மன் கோவில் நிர்வாகத்தை கவனித்து வரும் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையரான பெண் அதிகாரி ஒருவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் செயல் அலுவலர் உள்பட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு பதில் புதிதாக ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அதேபோல் பொறுப்பு அதிகாரிகளும் நியமிக்கப்பட உள்ளனர்.

மேலும் கோவில் பணிகளில் ஊழியர்கள் அனைவரும் கவனமாக இருக்கும்படி அனைத்து ஊழியர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப் பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com