

சென்னை:
தமிழகத்தைச் சேர்ந்த இளநிலைப் பட்டதாரிகள் மற்றும் முதுநிலைப் பட்டதாரிகளுக்குத் தமிழக அரசின் சார்பில், சென்னையில் உள்ள அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையத்திலும், கோயம்புத்தூர், மதுரை ஆகிய நகரங்களில் உள்ள அண்ணா நூற்றாண்டு குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி நிலையங்களிலும் மத்திய தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி முதல்நிலைத் தேர்வுக்குக் கட்டணமில்லாப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள குடிமைப்பணி முதல்நிலைத் தேர்வுக்குக் கட்டணமில்லாப் பயிற்சி அளிப்பதற்கான நுழைவுத் தேர்வு இன்று (27.02.2022) தமிழகத்திலுள்ள 18 மையங்களில், கோவிட்-19 தொடர்பாக அரசு வகுத்துள்ள வழிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்பட்டது. இத்தேர்வில், கூடுதலாக வினாக்கள் கேட்கப்பட்டு, அதற்காகக் கூடுதலாக 30 நிமிட நேரம் வழங்கப்பட்டு, மொத்தத் தேர்வு நேரம் இரண்டரை மணி நேரமாக அதிகரிக்கப்பட்டது. மாற்றுத் திறனாளிகள் தேர்வு எழுதச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
சென்னையில் தேர்வு நடத்தப்பட்ட மையங்களில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு நேரில் சென்று பார்வையிட்டார். செய்தி மக்கள் தொடர்புத் துறையின் இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் உடனிருந்தார்.