

காமன்வெல்த் பளு தூக்கும் போட்டி 65 கிலோ எடைப்பிரிவில் வெள்ளி பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டிக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான 65 கிலோ பளுதூக்கும் எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் ராஜா முத்துப்பாண்டி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.
ராஜா முத்துப்பாண்டி அவர்களின் சாதனையைப் பாராட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக 30 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
அவரது வெற்றி, இளைஞர்களுக்கு புதிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளிக்கட்டும். அவர், மேலும் பல சாதனைகள் படைத்து இந்திய திருநாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க எனது வாழ்த்துகள்!
இவ்வாறு அவர் கூறிப்பிட்டுள்ளார்.
கிளாஸ்கோ 2026 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில், பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவுப் போட்டியில் ஆதிக்கம் செலுத்தி, தனது மூன்றாவது தொடர்ச்சியான தங்க பதக்கத்தை வென்று, இந்தியாவிற்கு முதல் தங்க பதக்கத்தை பெற்று தந்த இந்திய பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானுவை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டி இருந்தார்.
இந்த நிலையில், காமன்வெல்த் போட்டிகளில் தனது அறிமுகத்திலேயே, ஆண்களுக்கான 65 கிலோ எடை பிரிவில் பளுதூக்கும் வீரர் ராஜா முத்துப்பாண்டி வெள்ளி பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இதன் மூலம், இங்கு நடைபெற்ற பளுதூக்கும் போட்டிகள் அனைத்திலும் இந்தியா குறைந்தது ஒரு பதக்கத்தையாவது உறுதி செய்தது.
முத்துப்பாண்டி 'ஸ்னாட்ச்' (snatch) முறையில் 126 கிலோவையும், 'கிளீன் அண்ட் ஜெர்க்' (clean and jerk) முறையில் 160 கிலோவையும் தூக்கி, மொத்தம் 286 கிலோ எடையுடன் போட்டியை நிறைவு செய்தார்.