மகாவிஷ்ணு மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு - 20 ஆம் தேதி வரை சிறை - நீதிமன்றம் அதிரடி

வீடியோக்கள் வெளியாகி அனைத்து தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.சென்னை திரும்பிய மகாவிஷ்ணுவை போலீசார் கைது செய்தனர்.
mahavishnu
Published on

சென்னையில் சைதாப்பேட்டை மற்றும் அசோக்நகரில் உள்ள அரசு பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரம்பொருள் பவுண்டேஷன் அமைப்பைச் சேர்ந்த மகாவிஷ்ணு ஊக்கப்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடத்துவதாகக் கூறி உரையாற்றினார்.

கடந்த காலங்களில் செய்த பாவங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மம் கடவுளால் படைக்கப்பட்டு இருக்கிறது என்று மாணவர்கள் மத்தியில் அவர் பேசினார். மாணவிகள் அழகாக இல்லாததற்கும், மாற்றுத் திறனாளிகள், ஏழைகள் ஆகியோரது நிலைக்கும் முன் ஜென்ம பாவம் தான் காரணம் என்று மகாவிஷ்ணு பேசியிருந்தார்.

இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி அனைத்து தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இவரை கண்டித்தும், இவரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய மகாவிஷ்ணுவை போலீசார் விமான நிலையத்தில் வைத்தே கைது செய்தனர்.

விமான நிலையத்தில் இருந்து அழைத்து செல்லப்பட்ட மகாவிஷ்ணுவிடம் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், மகாவிஷ்ணு மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இரு பிரிவினர் இடையே பகையை தூண்டுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், அவமதித்தல், வதந்திகள், பொய்யான தகவல்களை பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சென்னை சைதாப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மகாவிஷ்ணுவை வருகிற 20 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com