

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை (வெள்ளிக் கிழமை) கோழி கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விற்பனைக்கு கொண்டு வரப்படும் கோழிகளுக்கு குறிப்பிட்ட நாட்களுக்கு முன்பு தீவனம் வழங்கக் கூடாது. அதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு கோழி கறி விற்பனையாளருக்கு தொழில் ரீதியாக நஷ்டம் ஏற்படுவதாக கூறி இந்த கடை அடைப்பு போராட்டத்தை அறிவித்தனர்.
திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் நாளை கடைகள் அடைக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அதிக அளவு கோழி கறி விற்பனை செய்யும் நகரமாக சென்னை தலைநகரம் இருப்பதால் கடைகளை மூடினால் கடுமையான பாதிப்பு ஏற்படக்கூடும் என்று கருதி சென்னை கோழி மொத்த வியாபாரிகள் சங்கம் நாளை கோழிக்கறி கடைகள் வழக்கம் போல் செயல்படும். மூடப்பட மாட்டாது என்று தெரிவித்துள்ளது.
சென்னையில் 8 ஆயிரம் கோழி கடைகள் செயல்பட்டு வருகின்றன. தினமும் 600 டன் கோழிக்கறி விற்பனை செய்யப்படுகிறது. அதாவது 6 லட்சம் கிலோ கோழிகள் உயிரோடு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து சங்கத்தின் பொதுச்செயலாளர் ஞானம் கூறியதாவது:-
தமிழ்நாடு கோழி மொத்த விற்பனையாளர்கள் சங்கம் எடுத்துள்ள முடிவு சென்னை பெருநகருக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.
பொதுமக்கள் மட்டுமல்லாது ஓட்டல்கள், சிறு சிறு சில்லறை விற்பனையாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
ஒரு நாள் கோழிக் கடை களை அடைத்தால் கூட கோழி தொழில் சார்ந்தவர்கள் மட்டுமல்லாது ஓட்டல் தொழிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். அதனால் எங்களது கோரிக்கை குறித்து கோழி பண்ணையாளர்களிடம் ஆலோசிக்கப்பட்டு இருக்கிறது. நல்ல முடிவு எதிர்பார்க்கப்படுகிறது. எனவே சென்னையில் நாளை கோழி கறி கடைகள் வழக்கம் போல் செயல்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னையையொட்டி உள்ள காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் கோழிக்கடைகள் நாளை மூடப்படாது.
சென்னை மாவட்டத்தை ஒட்டியுள்ள புறநகர் பகுதிகளில் தான் அதிகளவு கோழி இறைச்சி கடைகள் இயங்குகிறது.
சிறு ஓட்டல்கள் முதல் நட்சத்திர ஓட்டல்கள் வரை கோழி இறைச்சி பயன்பாடு உள்ளது. அதனால் சென்னையையொட்டிய புறநகர் பகுதியில் வழக்கம் போல் நாளை கோழிக்கடைகள் செயல்படுகிறது.