

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 5-ந்தேதி பெரம்பூரில் உள்ள தனது வீட்டின் அருகே ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக ரவுடி ஆற்காடு சுரேசின் தம்பி பொன்னை பாலு, ரவுடி திருவேங்கடம் உட்பட 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் ரவுடி நாகேந்திரன், அவரது மகன் வக்கீல் அஸ்வத்தாமன் உள்பட 29 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ரவுடி திருவேங்கடம் போலீசாரின் என்கவுன்டரில் உயிரிழந்தார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் சிலர், அறிவுரை கழகத்தில் முறையீடு செய்து, குண்டர் சட்ட நடவடிக்கையை நீக்கினார்கள். மேலும் சிலர் இந்த வழக்கில் ஜாமீன் பெற்று ஜெயிலில் இருந்து வெளியே வந்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய ரவுடி நாகேந்திரன் உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை விசாரித்து வந்த சென்னை போலீசார் 7,800 பக்க குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இதற்கிடையே, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி அவரது சகோதரர் இம்மானுவேல் சென்னை ஐகோர்ட்டில் கடந்த ஆண்டு மனுதாக்கல் செய்தார்.
இதையடுத்து, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி கடந்த ஆண்டு டிசம்பர் 24-ந்தேதி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து அப்போதைய தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு சி.பி.ஐ. விசாரணைக்கு இடைக்கால தடைவிதித்தது.
இதற்கிடையே தமிழகத்தில் விஜய் தலைமை யிலான த.வெ.க. ஆட்சி பொறுப்பேற்றது. அதன் பிறகு, அந்த மேல்முறையீட்டு மனுவை தமிழக அரசு திரும்ப பெற்றுக்கொண்டது. இதையடுத்து ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு இருந்த தடை நீங்கியது. இதையடுத்து ஆம்ஸ்ட் ராங் கொலை வழக்கு தொடர்பான ஆவ ணங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் சமீபத்தில் தமிழக போலீசாரிடம் பெற்றனர். இதன் அடிப்படையில் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக அதிரடி விசாரணையை சி.பி.ஐ. அதிகாரிகள் தொடங்கி உள்ளனர்.
இன்னும் ஓரிரு நாள்களில், இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள், தனியாக ஒரு வழக்கை பதிவு செய்ய உள்ளனர். இந்த வழக்கில் விசாரணை அதிகாரியும் நியமிக்கப்பட உள்ளார். இதைத்தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலையில் மொத்தம் 29 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 2 பேர் உயிரிழந்து உள்ளனர். மீதமுள்ள 27 பேரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலையில் 27 பேருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டாலும், இந்த வழக்கில் ரவுடிகளுக்கு, பல வழிகளிலும் அரசியல் பிரமுகர்கள் பலர் உடந்தையாக இருந்ததாகவும் குற்றச்சாட்டு கூறப்பட்டது.
இதைத்தொடர்ந்தே பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் மாநில தலைவர் வக்கீல் ஆனந்தன் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இதனால்தான் அவரது சார்பில் கோர்ட்டில் முறையிட்டனர். தி.மு.க. ஆட்சியில் சி.பி.ஐ. விசாரணையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை, முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த மேல்முறையீட்டு மனுவை தமிழக அரசு திரும்ப பெற்றது. இதையடுத்து இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணையை தொடங்கியுள்ளது.
இந்த கொலை வழக்கு தொடர்பாக ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விரைவில் விசாரணை நடத்தி யார் மீதாவது சந்தேகம் உள்ளதா என்கிற தகவல்களை திரட்டுகிறார்கள். ஆம்ஸ்ட்ராங் கொலையில் 2 அரசியல் கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாக அவர்களின் பெயர் அடிபடுகிறது. அவர்கள் மீது ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர் வெளிப்படை யாகவே குற்றம் சாட்டி இருந்தனர்.
எனவே அடுத்த கட்டமாக சி.பி.ஐ. அதிகாரிகள் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்த இருப்பதை தொடர்ந்து, குறிப்பிட்ட அரசியல் கட்சி பிரமுகர்களிடமும் விசாரணை நடத்தப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலையில் ஏற்கனவே பல அரசியல் கட்சி பிரமுகர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இப்போது சி.பி.ஐ. விசாரணை தொடங்கி உள்ளதால் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ஏதோ ஒரு வகையில் உடந்தையாக இருந்த அரசியல் கட்சி பிரமுகர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.