

கர்நாடகாவில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையாததாலும், கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்காததாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. அதே நேரம் அணைக்கு வரும் தண்ணீரை விட குடிநீர் தேவைக்கு அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் இந்தாண்டு இதுவரை காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முடியாத நிலை உருவாகி உள்ளது. இதனால் 13 மாவட்டங்களில் சுமார் 16.4 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி இன்றி காணப்படுகிறது.
குறிப்பாக குறுவை சாகுபடி செய்ய முடியாத நிலை உருவாகி உள்ளது. எனவே சம்பா, தாளடி விவசாயத்துக்காவது தண்ணீர் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
இதேபோல் மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கும் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் 45 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களில் பாசனம் செய்ய முடியாத நிலை உள்ளது.
இந்த நிலையில் கடந்த மாதம் 28-ந் தேதி காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் காணொலி மூலம் நடை பெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழக அதிகாரிகள் கர்நாடகம் தண்ணீர் தரமறுப்பது பற்றியும், தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரின் அளவு பற்றியும் விளக்கினர்.
அதே போல் கர்நாடக அதிகாரிகள் அணைகளில் தற்போது போதுமான தண்ணீர் இல்லை என்று தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது என்று தெரிவித்தனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட குழு தலைவர் கடந்த 29-ந் தேதி முதல் தொடர்ந்து 15 நாட்களுக்கு வினாடிக்கு 3500 கனஅடி வீதம் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உத்தரவிட்டார். இதை எதிர்த்து காவிரி நீர்மேலாண்மை ஆணையத்திடம் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தது.
அது நிராகரிக்கப்பட்டு தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டனர். இந்த உத்தரவுக்கு எதிராக கர்நாடகாவில் கன்னட அமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது.
இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் நேற்று மாலை முதல் கபினி அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. எனவே அணையின் பாதுகாப்பை கருதி காவிரியில் தற்போது தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
கர்நாடக காவிரி ஆற்றுப்படுகையில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணை, கபினி அணை, ஹேமாவதி அணை, ஹாரங்கி அணை ஆகிய 4 அணைகளும் குடகு மாவட்டம் மற்றும் கேரளம் மாநிலம் வயநாடு மாவட்டத்தை நீர்ப்பிடிப்பு பகுதிகளாக கொண்டுள்ளது.
தற்போது குடகு மாவட்டத்திலும், வயநாடு மாவட்டத்திலும் தொடர் கனமழை பெய்து வருவதால் இந்த அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹாரங்கி அணை முழுவதும் நீர் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது.
2,859 அடி உயரம் கொண்ட இந்த அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரத்து 58 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் நேராக கபினி அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
மேலும், காவிரிநீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக கபினி அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இதனால் கபினி அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்த அணையின் உயரம் 2,284 அடி ஆகும். இதையடுத்து அணையின் பாதுகாப்பை கருதி நேற்று மாலை 3 மணிக்கு 5 ஆயிரம் கன அடி உபரி தண்ணீர் காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டது.
பின்னர் இரவு 8 மணிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தபடி இருந்ததால் இரவு 10 மணிக்கு 25 ஆயிரம் கனஅடி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. இதனால் எச்.டி. கோட்டை தாலுகாவில் உள்ள பிடர ஹள்ளி பாலம் நீரில் மூழ்கியது.
கபினி ஆற்றுப்படுகையில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், அவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என்றும் அங்குள்ள காவிரி நீர்ப்பாசன கழகம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் இன்று காலை 7 மணிக்கு கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு குறைக்கப்பட்டது. 25 ஆயிரம் கன அடியில் இருந்து வினாடிக்கு 17 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.
பின்னர் காலை 8 மணி அளவில் மீண்டும் வினாடிக்கு 9,958 கன அடியாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில் கபினி அணைக்கு தொடர்ந்து தண்ணீர் அதிகரித்து கொண்டு வருகிறது. வினாடிக்கு 23 ஆயிரம் கன அடி தண்ணீர் கபினி அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
இதனால் இன்று மதியம் 12 மணி அளவில் அணைக்கு வரும் 23 ஆயிரம் கன அடி உபரி தண்ணீரை அப்படியே காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் கிருஷ்ண ராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 1,768 கன அடி நீர் காவிரியிலும், கால்வாயிலும் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரி நீர் காவிரி ஆற்றில் சீறி பாய்ந்தபடி தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இன்று இரவு அல்லது நாளை காலை தமிழக எல்லையான பிலி குண்டுலு பகுதியை இந்த நீர் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டதை தொடர்ந்து தமிழக எல்லை பகுதியான பிலிகுண்டுலு மற்றும் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
ஒகேனக்கல்லில் நீர்வரத்து நேற்று காலை 500 கன அடியாகவும், மாலையில் அது 600 கன அடியாகவும் இருந்தது. இன்று காலையில் நீர்வரத்து 500 கன அடியாக உள்ளது. மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது.
இன்று ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்துள்ளனர். அவர்கள் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். பரிசலில் சென்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
அதே நேரத்தில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 42 கன அடியிலிருந்து 47 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர் மட்டம் 73.33 அடியாகவும், நீர் இருப்பு 35.63 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
கர்நாடக அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணைக்கு வரும்போது நீர்மட்டம் உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இருமாநில அரசுகளுக்கிடையே காவிரி பிரச்சினை நிலவி வரும் நிலையில் தற்போது மழை காரணமாக தண்ணீர் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது.