கபினி அணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் ஒகேனக்கல்லுக்கு வந்து சேர்ந்தது

அணையில் இருந்து வினாடிக்கு 27 ஆயிரம் கனஅடி நீர் காவிரியில் திறக்கப்பட்டு உள்ளது.

கபினி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கொள்ளேகால் வந்தடைந்தது
Published on

கபினி அணையில் இருந்து வினாடிக்கு 27 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலையில் ஒகேனக்கல்லுக்கு காவிரி நீர் வந்து சேர்ந்தது.

காவிரி நீர்

கேரளம் மற்றும் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணையும் ஏறக்குறைய நிரம்பி விட்டது என்றே சொல்லலாம். நேற்று காலை நிலவரப்படி அந்த அணையின் நீர்மட்டம் 2,282.59 அடியாக இருந்தது. அதாவது இந்த அணையில் 19.52 டி.எம்.சி. நீர் தேக்கி வைக்க முடியும்.

நேற்று காலை நிலவரப்படி அணையில் 18.61 டி.எம்.சி. நீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 31 ஆயிரத்து 746 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 27 ஆயிரம் கனஅடி நீர் காவிரியில் திறக்கப்பட்டு உள்ளது. அதாவது 3-வது நாளாக தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 25 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக நீர் திறக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

கபினி அணை

கபினி அணையில் இருந்து வினாடிக்கு 27 ஆயிரம் கனஅடி நீரும், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி நீரும் காவிரியில் திறந்து விடப்பட்டு உள்ளது. இந்த நீர் திருமகூடலுவில் உள்ள திரிவேணி சங்கமத்தில் ஒன்றாக சங்கமித்து அகண்ட காவிரியாக தமிழகம் நோக்கி வந்தது.

ஒகேனக்கல்

இந்த தண்ணீர் நேற்று கொள்ளேகால் வந்தடைந்தது. அங்கிருந்து கரைபுரண்டு ஓடி வந்த தண்ணீர் இன்று அதிகாலையில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை கடந்து ஒகேனக்கல்லை வந்தடைந்தது. இந்த தண்ணீர் இன்று மாலை அல்லது இரவுக்குள் மேட்டூர் அணையை வந்தடையும் என்று பொதுப்பணித்துறையினர் நம்பிக்கை தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com