காவிரி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் திங்கட்கிழமை மனுத் தாக்கல்-அமைச்சர் நிர்மல் குமார்

கர்நாடக அரசியலுக்கு ஆதரவாகத் தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சிகள் செயல்பட்டு வருவது மிகவும் வருத்தமளிக்கிறது.
Minister Nirmal Kumar
Published on

காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு உரிய நீரைப் பெற உச்சநீதிமன்றத்தை அணுகுவதே தற்போதுள்ள ஒரே சட்டரீதியான வழிமுறை என்று சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தின் பிடிவாத போக்கு:

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், "கர்நாடகாவில் எந்த ஆட்சி அமைந்தாலும் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் வழங்கக் கூடாது என்பதில் அவை உறுதியாக செயல்பட்டு வருகின்றன. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளையும் மதிக்காமல் கர்நாடகம் தொடர்ந்து மறுத்து வருகிறது. 100 ஆண்டுகளுக்கும் மேலாக அம்மாநிலத்தின் அரசியலே தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தரக் கூடாது என்பதை மையமாக வைத்தே நகர்கிறது" எனக் குற்றம்சாட்டினார்.

மத்திய அரசுக்குக் கண்டனம்:

மத்திய ஜல் சக்தி இணை அமைச்சரின் சமீபத்திய கருத்து குறித்து விமர்சித்த அவர், "உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, கீழ்மடை மாநிலமான தமிழ்நாட்டின் ஒப்புதல் இன்றி 0.1 டி.எம்.சி தண்ணீரைக்கூடத் திருப்பிவிடவோ, புதிய அணைகளைக் கட்டவோ முடியாது. இதனைப் புரிந்துகொள்ளாமல் மத்திய அமைச்சர் கர்நாடகாவிற்கு ஆதரவாகப் பேசுவது தமிழ்நாட்டு மக்களுக்குச் செய்யும் துரோகம்" என்றார்.

தமிழ்நாடு அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை:

விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கத் தமிழ்நாடு அரசு உறுதியாக இருப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர், உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து உரிய நீரைப் பெறுவதற்கான சட்ட நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு தீவிரமாக மேற்கொள்ளும். முதலமைச்சர் சட்ட வல்லுநர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனைகளை நடத்தி வருகிறார். விரைவில் விரிவான சட்ட உத்தி மற்றும் அரசின் அதிகாரப்பூர்வ முடிவுகள் அறிவிக்கப்படும்.

மத்திய அரசுக்கு அழுத்தம்:

உச்சநீதிமன்றத்தை நாடுவதுடன், தீர்ப்பாயத்தை வலியுறுத்துவது மற்றும் மத்திய அரசுக்குத் தொடர்ந்து அழுத்தம் தருவது என அனைத்து சாத்தியக்கூறுகளையும் அரசு பரிசீலித்து வருகிறது.

கர்நாடகவுக்கு ஆதரவு:

"கர்நாடக அரசியல்வாதிகள் மற்றும் கட்சிகள் தங்களின் அரசியல் லாபத்திற்காகவே தொடர்ந்து காவிரி விஷயத்தில் பிடிவாத போக்கைக் கடைப்பிடித்து வருகின்றன. கர்நாடக அரசியலுக்கு ஆதரவாகத் தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சிகள் செயல்பட்டு வருவது மிகவும் வருத்தமளிக்கிறது."

அரசியல் கட்சிகள் சதி:

காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு 17 டிஎம்சி தண்ணீர் கொடுத்திருக்க வேண்டும், காவிரியில் தமிழ்நாட்டிற்கு கர்நாடகா 15 நாட்களுக்கு வினாடிக்கு 2500 கன அடி வீதம் தண்ணீரை திறக்க ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், தவெக அரசு காவிரி நீரை பெற்று விடக்கூடாது என தமிழகத்தில் உள்ள கட்சிகள் அரசியல் செய்கின்றன. எனவே, காவிரி நீரை திறந்து விடக்கோரி வரும் திங்கட்கிழமை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம்.

தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை:

தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக வெளியாகும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்குப்புறம்பானவை என்றும், இந்த ஆண்டு மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று நிர்மல் குமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com