தாங்கல் ஏரியில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

ஆக்கிரமிப்பு காரணமாக தற்போது ஏரியின் பரப்பளவு சுருங்கி வருகிறது.தாங்கல் ஏரி ஆக்கிரமிப்பை அகற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
தாங்கல் ஏரியில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
Published on

செங்குன்றம்:

மாதவரம் மண்டலம், 32-வது வார்டுக்கு உட்பட்ட புத்தாகரம், மதுரவாயல் மற்றும் புழல் பைபாஸ் சாலை சந்திக்கும் பகுதியில் புத்தாகரம் தாங்கல் ஏரி உள்ளது. இந்த ஏரி சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது. சமீபத்தில் பெய்த மழை காரணமாக ஏரியில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது.

இந்நிலையில் தாங்கல் ஏரியை சுற்றி பல இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளன. இதுபற்றி ஏற்கனவே பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் தற்போது தாங்கல் ஏரியில் ஆக்கிரமிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஏரிக்கரையோரம் வீடு, கடைகள் மற்றும் குடோன்கள் கட்டி உள்ளனர். இதனை சிலர் வாடகைக்கும் விட்டு பணம் வசூலித்து வருகிறார்கள். ஆக்கிரமிப்பு காரணமாக தற்போது ஏரியின் பரப்பளவு சுருங்கி வருகிறது.

இதேபோல் ஏரிக்கு வரும் தண்ணீர் பாதையும் ஆக்கிரமிப்புகளால் அடைக்கப்பட்டு உள்ளன. இதனால் மழை பெய்யும்போது ஏரிக்கு தண்ணீர் வராமல் ஆங்காங்கே தடைபட்டு நின்று பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். இதன்காரணமாக ஏரியில் வழக்கமான தண்ணீரை சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

எனவே தாங்கல் ஏரி ஆக்கிரமிப்பை அகற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, தாங்கல் ஏரியில் ஆக்கிரமிப்பு தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்த படியே உள்ளன. இதனால் ஏரிக்கரையை சுற்றிலும் தற்போது கட்டிடங்களாக காட்சி அளிக்கின்றன.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாதவரம் மண்டல அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, ஏரி நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடை, வீடுகளை இடித்தனர். இப்போது மீண்டும் ஆக்கிரமிப்புகள் நடந்து வருகின்றன. ஆக்கிரமிப்பாளர்கள் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதனை தடுக்க முடியும். ஆக்கிரமிப்பு கட்டிடங்களை மட்டும் இடித்து விட்டு செல்வதால் சிறிது நாட்களுக்கு பிறகு மீண்டும் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் முளைத்து விடுகின்றன.

மேலும் தற்போது ஏரியில் உள்ள தண்ணீர் மாசு அடைந்து காணப்படுகிறது. முட்செடிகள் படர்ந்து உள்ளன. இதனையும் அகற்றவேண்டும். ஆக்கிரமிப்பை தடுக்க ஏரியை சுற்றி தடுப்புச்சுவர் கட்ட வேண்டும்.

இந்த ஏரியில் கூடுதலாக தண்ணீரை தேக்கி வைத்தால் சூரப்பட்டு, மேட்டூர், பாரதிதாசன் நகர், சண்முகபுரம் மற்றும் மாதனாங்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com