விபத்தில் மூளைச்சாவு: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்

பலத்த காயமடைந்த இருவரும் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.மூளைச்சாவு அடைந்த முத்துக்குமரனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க பெற்றோர் முன் வந்தனர்.
விபத்தில் மூளைச்சாவு: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்
Published on

சென்னை:

சென்னை கொளத்தூரில் வசித்து வருபவர் மாரிமுத்து. இவரது மனைவி மாலா. இவர்களுக்கு 5 குழந்தைகள். மாரிமுத்துவின் சொந்த ஊர் காஞ்சீபுரம் மாவட்டம் பஞ்சந்திருத்தி இருளர் குடியிருப்பு ஆகும்.

மாரிமுத்து தனது மூத்த மகன் முத்துக்குமரன்(13) என்பவனை திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூரில் உள்ள உறவினர் வீட்டில் விட்டு விட்டு மற்ற 4 குழந்தைகளுடன் சென்னை யில் வசித்து வந்தார். கடந்த 27-ந்தேதி முத்துக்குமரன், தனது உறவினரின் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு 12 வயது நண்பனுடன் வெளியில் சென்றார்.

திருப்பாச்சூர் அருகே திருப்பதி தேசிய நெடுஞ்சாலையை கடந்த போது திருத்தணி நோக்கி சென்ற கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு கடந்த 30-ந்தேதி முத்துக்குமரன் மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் கூறினார்கள். இந்த நிலையில் மூளைச்சாவு அடைந்த முத்துக்குமரனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க பெற்றோர் முன் வந்தனர். அதன்படி சிறுவனின் உடல் உறுப்புகள் மற்ற நோயாளிகளுக்கு தானமாக வழங்கப்பட்டன.

மேலும் விபத்து தொடர்பாக திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com