

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் சொந்த ஊர் தேனி அல்லிநகரம் ஆகும். கடந்த சில வருடங்களாகவே அவர் தேனிக்கு வந்தது கிடையாது. உடல் நலக்குறைவால் வெளிநாட்டில் சிகிச்சை மேற்கொண்ட பின்பு சென்னையில் தங்கி இருந்தார்.
இருந்தபோதும் அவரது உறவினர்கள் பாரதிராஜாவிடம் உடல் நலம் குறித்து நலம் விசாரித்து வந்தனர். இன்று காலையில் அவர் மறைந்த செய்தி அறிந்ததும் பலர் சென்னைக்கு அஞ்சலி செலுத்த சென்றனர்.
அல்லிநகரம் பகுதியில் அவர் வாழ்ந்த தெருவில் கிராம மக்கள் மிகுந்த சோகமடைந்தனர். அவர்கள் பல்வேறு பகுதியில் பாரதிராஜாவுக்கு பேனர் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும் அவரது படத்துக்கு மாலை அணிவித்தும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
40க்கும் மேமற்பட்ட திரைப்படங்களை எடுத்துள்ள பாரதிராஜா அவற்றை தேனி மாவட்டத்தின் கிராமங்களிலேயே படமாக்கியுள்ளார். அவரது படத்தில் துணை நடிகர், நடிகைகளுக்கு தனியாக ஏஜெண்டு கிடையாது. கிராமப்புறத்தில் உள்ள டீக்கடை தொழிலாளி, சாலையோர வியாபாரி, உள்ளூர் மக்களையே படத்தில் நடிக்க வைத்து விடுவார். இது கிராமப்புற படங்களுக்கு இயற்கையாக அழகு சேர்த்துவிடும்.
கதாநாயகன், கதாநாயகி தவிர மற்ற பெரும்பாலான நடிகர்கள் இது போல உள்ளூர் கிராமப்புற இளைஞர்களையே நடிக்க வைத்து பின்னர் அவர்கள் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தார். இதனால் அவரால் பயனடைந்த ஏராளமானோர் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.