செப்டம்பர் 1 முதல் கோவில்களுக்குள் செல்போன் எடுத்து செல்ல தடை: அமைச்சர் ரமேஷ்

செப்டம்பர் 1-க்குள் முதல் நிலை கோவில்கள் அனைத்திலும், மொபைல் கவுண்டர்கள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Minister Ramesh
செப்டம்பர் 1 முதல் முதல் நிலை கோவில்களில் செல்போன் கொண்டு செல்ல முடியாது
Published on

திருச்சியில் உள்ள திருவரங்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்:-

நிர்வாக ரீதியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் சிறப்பாக செயல்பட்டு, கோபுரம் திறப்பு இன்று நடத்தப்பட்டுள்ளது.

தற்போழுது இருக்கக்கூடிய நிலம் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் அறக்கட்டளையின் கீழ் அல்லது அந்த அறக்கட்டளையை நிர்வகிக்கும் நபர்களின் பெயர்களில் இருக்ககூடிய நிலங்களாக உள்ளது.

அந்த நிலத்தை என்ன பயன்பாட்டிற்காக முன்னோர்கள் அவர்களிடம் கொடுத்தார்கள் என்று பார்க்கும்போது, கோவில்களுக்கு தர்ம காரியங்கள் செய்வதற்காக கொடுக்கப்பட்டுள்ளது.

அதிக இடங்களில் கோவில் நிலம் கொடுக்கப்பட்டதற்கான நோக்கத்தை மறைத்துவிட்டு, அறநிலையத்துறையின் கவனத்திற்கு வராமல் முறைகேடான பத்திரப்பதிவுகளில் சில பேர் ஈடுபடுகின்றனர்.

இந்த விவகாரங்கள் குறித்து எங்களுக்கு தகவல் தெரிந்தவுடன் நிர்வாக ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

எந்தவொரு காலத்திலும் இதுபோன்ற கோவில் சொத்துகளும் மற்றும் அறக்கட்டளைக்கு கொடுக்கப்பட்ட சொத்துக்களும், அதன் உரிய நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படும்.

பழனி கோவில் நில மோசடி

பழனியில் எவ்வாறு நீதிமன்றத்தின் ஒரு மறுப்பு ஆணையை வைத்துக்கொண்டு, அந்த இடத்தை பத்திரப்பதிவு செய்தார்களோ, அந்த மாதிரியான விஷயங்கள் தான் இங்கு நடந்து கொண்டிருக்கிறது.

மேலும் பழனி கோவில் குறித்தான வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தபோது, “ஏற்கனவே இவர்கள் தனி நீதிபதியையும், நீதிமன்றத்தையும் ஏமாற்றி, இதுபோன்ற ஒரு ஆணையை பெற்றுள்ளனர்” என்று நீதிமன்றமே கூறியுள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நில மோசடி

கடந்த கால ஆட்சியில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், அறக்கட்டளைக்கு சொந்தமான ஒரு இடத்தை தனி நபர்கள் பெயர் மாற்றம் செய்தனர்.

இந்த வழக்கு குறித்து, கடந்த ஐந்து வருடங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் இன்று நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன், கோவில் மோசடியில் ஈடுபட்ட 19 பேர் மீது காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர்.

மொபைல்போன் தடை

ஏற்கனவே கோவில்களுக்குள் மொபைல்போன்களை அனுமதிக்க கூடாது என நீதிமன்ற உத்தரவு போடப்பட்டுள்ளது. ஆனால் எதுவும் கடைபிடிக்கப்படாமல் இருந்தது.

எனவே செப்டம்பர் 1-க்குள் முதல் நிலை கோவில்கள் அனைத்திலும், மொபைல் கவுண்டர்கள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் பொதுமக்கள் கோவில்களுக்குள் மொபைல் போன்கள் எடுத்து செல்வது தடுத்து நிறுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com