நீண்ட நாட்களாக கட்டணம் செலுத்தாவிட்டால் தானியங்கி முறையில் மின் இணைப்பு துண்டிப்பு

மின்சாரம் நேரில் துண்டிக்கப்படாமல் நுகர்வோர் அறியாமல் அதைப் பயன்படுத்தினால், பின்னர் அவர்கள் மீது மின் திருட்டு வழக்கு, அபராதம் மற்றும் கூடுதல் கட்டணங்கள் விதிக்கப்படும் அபாயம் உள்ளது.
மின் இணைப்பு
Published on

தமிழ்நாடு மின் பகிர்மானக்கழகம் (டான்செட்கோ) நீண்ட நாட்களாக மின்கட்டணம் செலுத்தாதவர்களின் மின் இணைப்பை நிரந்தரமாக துண்டிக்கும் நடைமுறையை தானியங்கி மயமாக்கியுள்ளது. ஊழியர்கள் பற்றாக்குறையைச் சமாளிக்கவும், நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும் ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய வழிமுறையின்படி, அக்டோபர் 2025 முதல் துண்டிக்கப்பட்ட குறைந்த மின்னழுத்த இணைப்புகளுக்கு இந்த விதிகள் பொருந்தும்.

மின் இணைப்பு துண்டிப்பு

இனி 6 மாதங்களுக்கும் மேலாக கட்டணம் செலுத்தாத நுகர்வோருக்கு நேரில் கடிதம் வழங்கப்படாமல், மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட 90 நாட்களுக்கு பிறகு நோட்டீசிற்கான இணையதள லிங்க் அடங்கிய எஸ்.எம்.எஸ். அனுப்பப்படும். அதன் பின்னரும் 90 நாட்களுக்குள் நிலுவையை செலுத்தாவிட்டால் கணக்கு நிரந்தரமாக முடிக்கப்படும்.

தற்போது வீட்டிற்கு மீட்டர் கணக்கெடுத்ததில் இருந்து 20 நாட்கள் அவகாசம் உள்ள நிலையில், அதற்குள் செலுத்த தவறினால் சேவை துண்டிக்கப்படுகிறது. நிலுவையிலுள்ள கணக்குகளை நிரந்தரமாக முடிக்கப் பொறியாளர்கள் மற்றும் கணக்கு அதிகாரிகளுக்குக் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த புதிய அமலாக்கம் குறித்து நுகர்வோர் ஆர்வலர்களும் ஓய்வுபெற்ற மின்வாரிய அதிகாரிகளும் கவலை தெரிவித்துள்ளனர்.

அபராதம்

கட்டண அவகாசம் முடிந்த 7 நாட்களில் மின் இணைப்பைத் துண்டிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதே தவிர, அது நேரடியாக களத்தில் துண்டிக்கப்படுமா? அல்லது பதிவேட்டில் மட்டும் துண்டிக்கப்படுமா? என்பதில் தெளிவில்லை என சென்னை பட்டாபிராமை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார். மின்சாரம் நேரில் துண்டிக்கப்படாமல் நுகர்வோர் அறியாமல் அதைப் பயன்படுத்தினால், பின்னர் அவர்கள் மீது மின் திருட்டு வழக்கு, அபராதம் மற்றும் கூடுதல் கட்டணங்கள் விதிக்கப்படும் அபாயம் உள்ளது.

மேலும், ஓய்வுபெற்ற அதிகாரி நீலகண்ட பிள்ளை, இந்த சுற்றறிக்கை தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் எந்த விதிகளின் கீழ் வெளியிடப்பட்டது எனக் கேள்வி எழுப்பியதுடன், வைப்புத்தொகை திரும்ப பெற இன்னமும் மனுக்களை நேரடியாகத் தர வேண்டியுள்ளதையும் சுட்டிக்காட்டினார். இதற்கு பதிலளித்துள்ள தமிழ்நாடு மின் பகிர்மான கழக அதிகாரிகள், 2022ல் திருத்தப்பட்ட விதிகளின்படியே இது அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், வைப்புத்தொகை திரும்பப்பெறும் நடைமுறையும் விரைவில் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com