தனியார் தொழிற்சாலையில் 100 பேருக்கு மயக்கம்: பிரியாணி வழங்கிய உணவு நிறுவனத்துக்கு ‘சீல்’

தனியார் நிறுவனத்திற்கு பிள்ளைப்பாக்கத்தில் உள்ள கேட்டரிங் நிறுவனத்தினர் சிக்கன் பிரியாணி வினியோகம் செய்து இருந்தனர்.
Catering Company seal
உணவு வினியோகம் செய்த நிறுவனத்திற்கு சீல்
Published on

ஸ்ரீபெரும்புதூர் அருகே பிள்ளைப்பாக்கம் சிப்காட் பகுதியில் கார்களுக்கு கேபிள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

தொழிற்சாலை ஊழியர்கள்

நேற்று மதியம் தொழிற்சாலை ஊழியர்களுக்கு மதிய உணவாக சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. பிரியாணி வழங்கும் போது உணவில் துர்நாற்றம் வீசுவதாக ஊழியர்கள் தெரிவித்தும் உணவு வழங்கபட்டதாக கூறப்படுகிறது. அதில் இருந்த சிக்கன் கெட்டுப்போய் இருந்ததாக தெரிகிறது.

பிரியாணி

இந்த நிலையில் பிரியாணி சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே அடுத்தடுத்து 100-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கடுமையான வயிற்று வலி, வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவர்களை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அருகே பென்னலூர் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதில் 2 ஊழியர்களின் உடல் நிலை மோசமாக உள்ளது. அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற ஊழியர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்

இதுகுறித்து தகவல் அறிந்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உடனடியாக களத்தில் இறங்கி விசாரணை நடத்தினர். தனியார் நிறுவனத்திற்கு பிள்ளைப்பாக்கத்தில் உள்ள கேட்டரிங் நிறுவனத்தினர் சிக்கன் பிரியாணி வினியோகம் செய்து இருந்தனர். சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்ததே இந்த பாதிப்பிற்கு காரணம் என்பது தெரிந்தது.

உணவு நிறுவனத்துக்கு சீல்

இதைத்தொடர்ந்து உணவு பாதுகாப்புத் துறையினர் அந்த கேட்டரிங் நிறுவனத்திற்கு அதிரடியாக சீல் வைத்தனர். கேட்டரிங் நிறுவனத்தில் இருந்த உணவு மாதிரிகளை சோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். பொதுமக்கள் மற்றும் ஊழியர்களுக்கு தரமற்ற உணவை வினியோகம் செய்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர். மேலும் இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com