முடியும் தருவாயில் மாம்பழ சீசன்- சேலத்துக்கு மாம்பழங்கள் வரத்து 30 டன்னாக குறைந்தது

நாமக்கல் மாவட்டத்தில் சேந்தமங்கலத்திலும், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் மாமரங்கள் அதிகளவில் உள்ளன.கடந்த 2 நாட்களாக சேலம் மார்க்கெட்டுக்கு மாம்பழம் வரத்து வெகுவாக குறைந்துள்ளது.
முடியும் தருவாயில் மாம்பழ சீசன்- சேலத்துக்கு மாம்பழங்கள் வரத்து 30 டன்னாக குறைந்தது
Published on

சேலம்:

இந்தியாவில் மாம்பழம் சாகுபடியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம் உள்பட பல மாநிலங்களில் மாமரங்கள் அதிகளவில் உள்ளன. தமிழக அளவில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் உள்பட பல பகுதிகளில் மாமரங்கள் நிறைந்து காணப்படுகின்றன.

இந்த ஆண்டில் மாம்பழம் விளைச்சல் சீராக இருந்தது. குறிப்பாக மே மாதம் தொடக்கத்தில் மாம்பழம் வரத்து அதிகமாக இருந்தது. தற்போது சேலம் மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்து வருகிறது. இதனால் மாம்பழம் சீசன் ஓரிரு வாரத்தில் முடியும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து சேலம் கடைவீதி மாம்பழம் மொத்த வியாபாரிகள் கூறியதாவது:-

சேலம் மாவட்டத்தில் வரகம்பாடி, அடிமலைப்புதூர், அயோத்தியாப்பட்டணம், நங்கவள்ளி, தாரமங்கலம், ஜலகண்டாபுரம், மேச்சேரி, பேளூர், நீர்முள்ளிக்குட்டை, கூட்டாத்துப்பட்டி, ஏற்காடு அடிவாரம், தும்பல், கருமந்துறை, வாழப்பாடி, மேட்டூர், காமலாபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும், நாமக்கல் மாவட்டத்தில் சேந்தமங்கலத்திலும், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் மாமரங்கள் அதிகளவில் உள்ளன.

இந்த பகுதிகளில் இருந்து மாம்பழம் சேலம் மார்க்கெட்டுக்கும், இதைதவிர தமிழகத்தில் பிற இடங்களுக்கும் அனுப்பப்படுகிறது. குறிப்பாக சேலத்தில் இருந்து வட மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் இருந்து சேலம் மார்க்கெட்டுக்கு மல்கோவா, குண்டு, சேலம் பெங்களூரா, செந்தூரா, இமாம்பசந்த், குதாத், கிளிமூக்கு மாங்காய் வரத்து கணிசமாக இருந்தது. மே 15-ந் தேதிக்கு மேல் உச்சக்கட்டமாக வரத்து 70 முதல் 80 டன்னாக இருந்தது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சேலம் மார்க்கெட்டுக்கு மாம்பழம் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி சேலம் மார்க்கெட்டுக்கு 30 டன் மாங்காய்தான் விற்பனைக்கு வந்தது. இன்னும் ஓரிரு வாரத்தில் மாங்காய் சீசன் முடியும் தருவாயில் உள்ளது. அடுத்த வாரம் மாம்பழம் சீசனில் கடைசி ரகமான நீலம் வரத்து தொடங்கும். நீலம் பழம் இரு வாரத்திற்கு இருக்கும்.

இம்மாதம் கடைசியில் சீசன் முழுமையாக முடிந்து விடும். ஜூலையில் மொத்த மார்க்கெட்டுக்கே 3 முதல் 5 டன் அளவுக்கு மட்டுமே மாம்பழம் வரத்து இருக்கும். தற்போது மாம்பழம் ரகத்தை பொறுத்து ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.150 என விற்பனை செய்யப்படுகிறது.

இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com