த.வெ.க. ஆட்சி 6 மாதம் இருக்குமா என்ற கேள்வி இருக்கிறது: பிறகு யாரிடம் சென்று கேட்பது- அனிதா ராதாகிருஷ்ணன்

இந்த ஆட்சியே 6 மாதம் இருக்குமா? என்ற கேள்வி எழுகின்றபோது, இன்னும் 6 மாசம் கழிச்சி கேட்கிறது என்றால், யாரிடம் கேட்பது.
த.வெ.க. ஆட்சி 6 மாதம் இருக்குமா என்ற கேள்வி இருக்கிறது: பிறகு யாரிடம் சென்று கேட்பது- அனிதா ராதாகிருஷ்ணன்
Published on

தமிழக சட்டசபை தேர்தலில் த.வெ.க. 108 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ், இரண்டு கம்யூனிஸ்டுகள், விசிக, ஐயுஎம்எல் ஆகிய கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்து விஜய் முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.

கடந்த மாதம் 10-ந்தேதி தமிழக முதல்வராக பதவி ஏற்றார். அப்போது, த.வெ.க. ஆட்சிக்கு 6 மாதம் தொந்தரவு கொடுக்கமாட்டோம் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார். ஆனால் த.வெ.க. ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றன.

இதற்கிடையே நேற்று முன்தினம் திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்கான முதலமைச்சர் விஜய் திருச்சி சென்றிருந்தார். அங்கு பேசிய அவர், 6 மாதம் அவகாசம் என்றவர்களால் 6 நாள் கூட பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஆட்சி அமைத்த அரைமணி நேரத்தில் விமர்சிக்க தொடங்கிவிட்டார்கள் என்றார்.

இது தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் எம்.எல்.ஏ.வுமான அனிதா ராதாகிருஷ்ணனிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு அனிதா ராதாகிருஷ்ணன் பதில் அளித்ததாவது:-

நாங்கள் நடத்துவது அரசியல் கட்சி. திமுக அரசியல் கட்சி. எந்த குற்றம் எப்போது நடந்தாலும் அதை சுட்டிக்காட்டுவது எதிர்க்கட்சிகளின் கடமை. அந்த கடமையை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் செய்து கொண்டிருக்கிறார். இயக்கத்தின் பெரிய தலைவர்கள் சுட்டிக் காட்டுகின்றார்கள்.

அதனால 6 மாசம்.., 8 மாதம்.., 10 மாதம்.., இந்த ஆட்சியே 6 மாதம் இருக்குமா? என்ற கேள்வி எழுகின்றபோது, இன்னும் 6 மாசம் கழிச்சி கேட்கிறது என்றால், யாரிடம் கேட்பது.

போதைப்பொருள், பெண்களுக்கு எதிரான குற்றத்தால்தான் திமுக ஆட்சி வீழ்ந்தது என்று சொல்கிறார் அல்லவா? இன்னைக்கு என்ன நடக்கு. எத்தனை கற்பழிப்பு, எத்தனை பெண் குழந்தைகள் பாதிக்கப் பட்டிருக்காங்க. கள்ள லாட்டரி சீட்டு எப்படி நடக்கு. கள்ள லாட்டரி சீட்டு நடப்பதால், லாட்டரி சீட்டை திறந்து விடுவதற்கு ஒரு திட்டம் போட்டிருப்பதாக தகவல் இருக்கு. அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியல. தமிழ்நாட்டை குட்டிச்சுவர் ஆக்கக் கூடிய ஒரு சூழ்நிலை வந்துவிடுமோ என்ற அச்சம் மக்கள் மன்றத்திலேயே பெரியதாக இருக்கு.

இவ்வாறு அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com