

உடல் பருமன் மற்றும் சுவாச பிரச்சனை உள்ள பக்தர்கள் இடுக்கு பிள்ளையார் கோவிலில் உள்ள குகை போன்ற பகுதியில் புகுந்து வருவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் இடுக்கு பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் சிறிய குகை போன்ற அமைப்பில் 3 வாசல்கள் உள்ளன. பின் வாசல் வழியாக ஒருக்களித்து படுத்தவாறு உள்ளே நுழைந்து, மெல்லமாக கைகளை ஊன்றியவாறு நகர்ந்து முன் வாசல் வழியாக வெளியே வரவேண்டும்.
குகை போன்ற பகுதியில் இருந்து வெளியே வந்த உடன் நந்தி இருக்கும். பக்தர்கள் நந்தி பகவானையும், இடுக்கு பிள்ளையாரையும் வணங்கி செல்கின்றனர். பெரும்பாலான கிரிவல பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று இடுக்கு பிள்ளையார் கோவில் குகையில் நுழைந்து வெளியே வழிபட்டு செல்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு ஆந்திராவை சேர்ந்த மணிக்குமார் (வயது 36) என்பவர் தனது குடும்பத்துடன் கிரிவலம் சென்றார். சுமார் 11 மணியளவில் இடுக்கு பிள்ளையார் கோவிலுக்கு மணிக்குமார் வந்தார்.
குகை வடிவத்தில் உள்ள கோவில் பகுதியில் படுத்தபடி நுழைந்தார். உடல் பருமன் அதிகம் என்பதால் குகையில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்தார்.
பின்னர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினார். இதனை கண்ட சக பக்தர்கள் மயங்கி கிடந்தவரை போராடி வெளியே கொண்டு வந்தனர்.
108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் மணிக்குமார் வரும் வழியிலே இறந்துவிட்டதாக கூறினர். இதை கேட்ட மணிக்குமார் குடும்பத்தினர் கதறி அழுதனர்.
இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடல் பருமன் மற்றும் சுவாச பிரச்சனை உள்ள பக்தர்கள் இடுக்கு பிள்ளையார் கோவிலில் உள்ள குகை போன்ற பகுதியில் புகுந்து வருவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.