

தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் நடித்தவரும், சின்னத்திரையில் மிகவும் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஹேமா ராஜ்குமார். சின்னத்திரையில் இவர் நடித்து வரும் மீனா கதாபாத்திரம் இவருக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொடுத்திருக்கிறது. இந்த நிலையில், சென்னையில் உள்ள மெக்காலே பள்ளியின் ஆண்டு விழாவில் கலந்து கொண்டார் நடிகை ஹேமா ராஜ்குமார்.
ஆண்டு விழாவில் பள்ளி மாணவர்களின் ஆட்டம், பாட்டம் மற்றும் நடிப்பு கலந்த கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்த நடிகை ஹேமா ராஜ்குமார் இறுதியில் அவர்களை உற்சாகப்படுத்தி பேசினார். மேலும் மாணவர்களுக்கு பாராட்டு, அன்பு மற்றும் நன்றி தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர், "பள்ளி நிகழ்ச்சிகள் என்று வரும் போது அதனை நன்கு கொண்டாட வேண்டும் என்ற மனநிலையில் இருப்பேன். ஆனால் எனக்கென்று ஒரு மகன் பிறந்த பிறகு எல்லாமே மாறிவிட்டது. பெற்ற தாயாக அவனை பார்த்துக் கொள்வது, அவனுக்கு தேவையானவற்றை செய்து கொடுப்பது, படப்பிடிப்பு இல்லாத நாட்களில் காலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை அவனுடன் சுற்றிக் கொண்டிருப்பேன்."
"இங்கு வந்த பார்த்த பிறகு மாணவர்கள் எத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டேன். முன்பு ஆண்டு விழா என்றால் ஒருமாத காலம் வகுப்புகள் சரியாக நடக்காது. ஆண்டு விழாவுக்கான ஏற்பாடுகள், அதற்கான பயிற்சி என வகுப்புகள் அதற்கே சரியாக இருக்கும். கல்லூரி நாட்களில் பெரும்பாலும் OD-யிலேயே பாதி காலம் ஓடிவிட்டது. எங்களை பொருத்தவரை ஆண்டுவிழா மிகவும் கொண்டாட்டமாக இருக்கும்."
"இங்கு ஆண்டு விழாவின் போது மாணவர்கள் இந்த மேடையை கொண்டு தங்களுக்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டுள்ளனர். ஆசிரியை பேசும் போது மாணவர்கள் தங்களது நம்பிக்கை மற்றும் ஆற்றலை அதிகப்படுத்திக் கொள்வதற்காக இந்த மேடையை பயன்படுத்துவதாக கூறினார். அவர் சொன்னது சரியான விஷயமாக இருந்தது. இந்தக் காலத்தில் பெரும்பாலான குழந்தைகள் மற்றவர்களுடன் பேசுவதை பெரும்பாலும் குறைத்துக் கொண்டுள்ளனர். நானும் என் மகனுக்கு மற்றவர்களுக்கு வணக்கம் தெரிவிக்க வேண்டும், வீட்டிற்கு வந்தால் அவர்களிடம் நலம் விசாரிக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்து வருகிறேன்."
"இந்தப் பள்ளியின் மாணவர்கள் இத்தனை பேருக்கு முன்பு மேடையில் மிகவும் அற்புதமாக செயல்பட்டார்கள். அவர்களுக்கான ஒவ்வொரு வசனத்தையும் மறக்காமல் மிகவும் அருமையாக பேசினார்கள். இங்குள்ள குழந்தைகள் ஒவ்வொருத்தரும் மிகவும் சிறப்பாக பெர்ஃபார்மன்ஸ் செய்து அசத்தினர். அனைவருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றி. மாணவர்களை இத்தனை சிறப்பாக செயலாற்ற அவர்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்கள் அனைவருக்கும் பாராட்டுகள்," என்று கூறினார்.
ஹேமா ராஜ்குமார் கலந்து கொண்ட ஆண்டு விழாவில் மெக்காலே பள்ளியின் தலைமை ஆசிரியர் அன்பு, ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.