நடிகர் பாலையா பேரன் வீட்டு நீச்சல் குளத்தில் முதலை- தண்ணீரை சுத்தம் செய்தபோது அதிர்ச்சி

நீச்சல் குளத்திற்குள் ஒன்றரை அடி நீளம் உள்ள முதலைகுட்டி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
நடிகர் பாலையா பேரன் வீட்டு நீச்சல் குளத்தில் முதலை- தண்ணீரை சுத்தம் செய்தபோது அதிர்ச்சி
Published on

தாம்பரம்:

தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி தங்கவேல். தொழில் அதிபரான இவர் மறைந்த பழம் பெரும் நடிகர் பாலையாவின் பேரன் ஆவார்.

பா.ஜனதா கட்சியில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட ஓ.பி.சி. அணி மாவட்ட தலைவராகவும் உள்ளார். இவர் மனைவி மற்றும் 2½ வயது மகனுடன் பங்களா வீட்டில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் நீச்சல் குளம் உள்ளது.

கடந்த சில நாட்களாக தாம்பரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீச்சல் குளத்தில் தண்ணீர் அசுத்தம் ஆனது.

இதையடுத்து பாலாஜி தங்கவேல் இன்று காலை நீச்சல் குளத்தில் இருந்த தண்ணீரை வெளியேற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது நீச்சல் குளத்திற்குள் ஒன்றரை அடி நீளம் உள்ள முதலைகுட்டி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்பு அந்த முதலை குட்டியை லாவகமாக பிடித்து பிளாஸ்டிக் கூடையில் அடைத்து வைத்தார். இதுபற்றி வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பூங்கா ஊழியர்கள் விரைந்து வந்து அந்த முதலைகுட்டியை மீட்டு பூங்காவிற்கு எடுத்துச் சென்றனர்.

வண்டலூர் பூங்காவில் உள்ள முதலை குட்டிகளை உணவுக்காக பறவைகள் தூக்கி செல்லும் போது கீழே விழுவது வழக்கம். இதேபோல் சதானந்தபுரம், ஆலப்பாக்கம், நெடுங்குன்றம் பகுதியில் உள்ள நீர் நிலைகளில் இதற்கு முன்பும் தவறி விழுந்த முதலைகள் சிக்கி உள்ளது.

சாலையில் முதலை நடந்து சென்ற சம்பவமும் நடந்து உள்ளது. பறவைகள் தூக்கி சென்ற போது இந்த முதலை குட்டியும் நீச்சல் குளத்தில் விழுந்து இருக்கலாம் என்று தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com