

காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாததால் திருச்சியில் இன்று ஆடிப்பெருக்கு விழா களையிழந்து காணப்பட்டது. இது பக்தர்கள், பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது. இதுகுறித்து அய்யாளம்மன் படித்துறை பகுதியில் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடிய இளங்கோவன் -காவ்யா தம்பதியினர் கூறும்போது,
திருமணத்துக்கு பின் முதல் முறையாக இன்று ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாட வந்தோம். ஆடிப்பெருக்கு என்றாலே காவிரி ஆற்றில் பாய்ந்து ஓடும் நீரில் குளித்து மகிழ்வதே முதலில் ஞாபகத்துக்கு வரும். ஆனால் தண்ணீர் இல்லாத காரணத்தினால் காவிரி ஆற்றில் குளிக்க முடியாதது ஏமாற்றமாகி விட்டது.
தண்ணீர் வராத காரணத்தினால் நாங்கள் வீட்டிலிருந்து குளித்துவிட்டு இங்கு புறப்பட்டு வந்தோம். பின்னர் மாங்கல்யம் மாற்றி சிறப்பு வழிபாடு செய்தோம். தண்ணீர் வராத காரணத்தினால் வழக்கமான கூட்ட த்தையும் பார்க்க முடிய வில்லை என்றனர்.
பொதுமக்கள் சிலர் கூறுகையில், ஆடிப்பெருக்கு நாளன்று ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்திற்கு வந்து புனித நீராடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். கரைபுரண்டு ஓடும் புதுவெள்ளத்தில் கால்களை வைத்து, காவிரித் தாயை வேண்டி, பூக்களையும் மங்களப் பொருட்களையும் ஆற்றில் மிதக்க விட்டு வழிபாடு செய்வதே அளப்பரிய மகிழ்ச்சியைத் தரும். ஆனால், இந்த ஆண்டு கண் எட்டும் தூரம் வரை வெறும் மணல் பரப்பாகவே காட்சியளிக்கிறது.
பிளாஸ்டிக் குழாய்கள் மூலம் வரும் தண்ணீரில் நீராடி வழிபாடு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஜீவ நதியான காவிரியில் நீர்வரத்தின்றி வறண்டு கிடப்பதைப் பார்க்கும்போது மனதிற்கு மிகுந்த வேதனையளிக்கிறது.
விவசாயிகள் கூறுகையில், “ஆடிப்பெருக்கு நாளன்று காவிரியில் நீர் பொங்கி வந்தால் மட்டுமே அந்த ஆண்டில் விவசாயம் செழித்து வளரும் என்பது எங்களின் தலைமுறை நம்பிக்கை. காவிரி அன்னைக்கு சிறப்புப் படையலிட்டு, ஆற்று நீரைக் தலையில் தெளித்து வழிபாடு செய்தால்தான் எங்களுக்கு ஆத்ம திருப்தி கிடைக்கும். தற்போது ஆற்றில் நீர்வரத்து முற்றிலும் நின்று விட்டதால், வறண்ட மணல் பரப்பிலேயே நின்று வழிபாடு செய்துவிட்டுத் திரும்புகிறோம். இந்த ஆண்டு விவசாய பணிகள் எவ்வாறு அமையப் போகிறதோ என்ற கவலையும் பயமும் எங்களை ஆட்கொண்டுள்ளது என்றார்.
புதுமண தம்பதி வசந்த் - அம்மு கூறும்போது, தண்ணீர் இல்லையென்றாலும் மனசு இருந்தால் வருவார்கள். இயற்கையை நாடி, மனமிருந்தால் தண்ணீரில் இருக்கும் மீன்களுக்கும் உணவளியுங்கள். அதுவும் உயிர்கள் தானே என்றனர்.