

ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு நாளை திருத்தணி முருகன் கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் பாதுகாப்பு கருதி கர்ப்பிணி பெண்கள், முதியோர், மாற்றத்திறனாளிகள் சாமி தரிசனம் செய்ய வர வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடிக்கிருத்திகை விழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு ஆடிக்கிருத்திகை விழா நேற்று ஆடி அஸ்வினியுடன் தொடங்கியது. இன்று ஆடி பரணி, நாளை(6-ந்தேதி) ஆடிக்கிருத்திகை விழா நடைபெறுகிறது. ஆடிக்கிருத்திகை விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு தேவையான குடிநீர், வாகன நிறுத்தும் இடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன.
சிறப்பு பஸ்கள், சிறப்பு ரெயில்களும் இயக்கப்படுகின்றன. அனைத்து முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு நாளை திருத்தணி முருகன் கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து பாதுகாப்பு கருதி கர்ப்பிணி பெண்கள், முதியோர், மாற்றத்திறனாளிகள் நாளை சாமி தரிசனம் செய்ய வர வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் கவிதா வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருத்தணி முருகன் கோவிலில் நாளை(6-ந்தேதி)ஆடிக்கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு சுமார் 5 முதல் 7 லட்சம் பக்தர்கள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டில் 5 லட்சம் பக்தர்கள் வருகை புரிந்துள்ளனர். இது தொடர்பாக அனைத்து முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளும் சிறப்பான முறையில் மாவட்ட நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இருப்பினும் அதிக பக்தர்கள் வருகை காரணமாக திருத்தணி நகரத்துக்குள் வாகனப் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் ஆகியோர் பாதுகாப்பு கருதி மேற்படி தினங்களில் நேரடி தரிசனத்திற்கு வருகை புரிவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
ஆடிபரணியை முன்னிட்டு அதிகாலை முதலே திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். ஏராளமான பக்தர்கள் காவடி சுமந்து வந்தும், தலைமுடி காணிக்கை செய்தும் தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர். மலைக்கோவிலில் காவடி செலுத்துவதற்கு தனி மண்டபம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு மாலையில் சரவண பொய்கை திருக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் வள்ளி தெய்வானை சமேதராய் உற்சவமூர்த்தி கடவுள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரணீத் உத்தரவின் பேரில் திருத்தணி உதவி காவல் கண்காணிப்பாளர் ஷீபம் திமான் தலைமையில் சுமார் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர் மலைக்கோவில் திருக்குளம் நல்லான்குளம், மேல் திருத்தணி உள்ளிட்ட பகுதிகளில் நோய் தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நகராட்சி சார்பாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளர்கள் சுகாதார பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மலைக்கோவிலுக்கு சென்று வர கோயில் சார்பில் இலவச பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆட்டோக்கள் மலை கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் க.ரமணி தலைமையில் அறங்காவலர் குழு தலைவர் சு.ஸ்ரீதரன், வி.சுரேஷ்பாபு, மோகனன். ஜி, உஷாரவி, மு.நாகன் மற்றும் அதிகாரிகள் செய்து உள்ளனர்.