9,999 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு ஆகஸ்ட் 2-வது வாரத்தில் கலந்தாய்வு-தரவரிசை பட்டியல் அடுத்த வாரம் வெளியாகிறது!

இந்த ஆண்டு திருப்பூர், திருவள்ளூர், நாமக்கல் ஆகிய 3 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் கூடுதலாக தலா 50 இடங்கள் கிடைத்து உள்ளன.
MBBS Counselling
Published on

தமிழ்நாட்டில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னை கே.கே. நகர் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது.

கூடுதலாக 50 இடங்கள்:

அரசு மருத்துவக் கல்லூரிகளில் மட்டும் மொத்தம் 5 ஆயிரத்து 349 மருத்துவ இடங்கள் உள்ளன. தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 4,650 உள்ளன. மொத்த 9,999 எம்.பி.பி.எஸ்.இடங்கள் உள்ளன. இந்த ஆண்டு திருப்பூர், திருவள்ளூர், நாமக்கல் ஆகிய 3 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் கூடுதலாக தலா 50 இடங்கள் கிடைத்து உள்ளன.

இவற்றையும் சேர்த்து இந்த மொத்த இடங்கள் கணக்கிடப்பட்டு உள்ளது. மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு 72 ஆயிரம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

எண்ணிக்கை உயர வாய்ப்பு:

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டுக்கு கீழ் இயங்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் தற்போது உள்ள மொத்த எம்.பி.பி.எஸ். இடங்கள் 9,999 ஆகும். கவுன்சிலிங் தொடங்குவதற்கு முன்பு இந்த எண்ணிக்கையில் மாற்றம் வரக்கூடும். ஒரு தனியார் மருத்துவக் கல்லூரிக்கு புதிதாக அனுமதி கிடைக்க வாய்ப்பு உள்ளது. அவை அகில இந்திய மருத்துவ ஆணையத்தின் அனுமதி பெற்று வரும் பட்சத்தில் இந்த எண்ணிக்கை உயர வாய்ப்பு உள்ளது.

முதல்கட்ட மருத்துவ கலந்தாய்வு:

இந்தநிலையில் தற்போதைய எம்.பி.பி.எஸ். இடங்களின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. அடுத்த வாரம் தரவரிசை பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. ஆகஸ்ட் 2-வது வாரத்தின் தொடக்கத்தில் முதல் கட்ட மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் என்று மருத்துவ மாணவர் சேர்க்கை செயலாளர் டாக்டர் லோகநாயகி தெரிவித்துள்ளார்.

இந்திய மருத்துவ ஆணையத்தில் இருந்து அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு அட்டவணை இன்று மாலை அல்லது நாளைக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு தொடங்கும். மாநில பொது கலந்தாய்வுக்கான பட்டியலும் தயாரிக்கப்பட்டு விரைவில் தொடங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com