

மழை
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் வெளியூர்களில் இருந்து செம்மறி ஆடுகளை தொழிலாளர்கள் ஓட்டி வந்து கிடை கட்டி மேய்த்து வருகின்றனர். விருத்தாசலம் பகுதியில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது.
அப்போது இளங்கியனூர் பகுதியில் தண்டவாளம் அருகே கிடையில் அடைந்திருந்த ஆடுகள் திடீரென மழை பெய்ததால் அங்கிருந்து விருத்தாசலம்- சேலம் ரெயில்வே தண்டவாளத்தில் தஞ்சம் புகுந்தன.
கனமழை பெய்ததால் தண்டவாளத்திலேயே சுமார் 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் படுத்திருந்தன. இரவு 11 மணிக்கு சேலத்தில் இருந்து சென்னை செல்வதற்காக விருத்தாசலம் நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் தண்டவாளத்தில் படுத்திருந்த சுமார் 70-க்கும் மேற்பட்ட ஆடுகள் மீது சரமரியாக மோதியது.
இதில் இரு பக்கமும் தூக்கி வீசப்பட்ட செம்மறி ஆடுகள் அனைத்தும் துடிதுடித்து உயிரிழந்தன. சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு ரெயிலில் சிக்கி இழுத்துச் சென்ற ஆடுகள் தண்டவாளத்தின் இருபுறங்களிலும் ஆங்காங்கே தலை தனியாகவும் உடல்கள் தனியாகவும் சதை சதையாகவும் சிதறி கிடந்தன.
இதனால அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது. மேலும் அப்பகுதியில் இருந்த தெரு நாய்கள் தண்டவாளப் பகுதிக்கு திரண்டு வந்து ஆங்காங்கே சிதிலமடைந்து கிடந்த ஆடுகளின் உடல்களை கவ்வி இழுத்துச் சென்றுதின்றன.
தகவல் கிடைத்து விரைந்து வந்த ஆத்தூர் ரெயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் சேலம் ரெயில்வே இருப்பு பாதை போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தண்டவாளத்தில் ரெயில் மோதி இறந்து கிடந்த செம்மறி ஆடுகள் யாருடையது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.