கரும்பு விவசாயிகளுக்கு 50% மானியம்- வெங்காய சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும்- அமைச்சர் வினோத்

கரும்பு சாகுபடிச் செலவைக் குறைக்கவும், உற்பத்தியைப் பெருக்கவும் இரண்டு முக்கிய மானியத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
minister vinoth
Published on

தமிழக வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளின் உற்பத்தித் திறனை உயர்த்தவும், அறுவடைக்குப் பின் தானியங்கள் மற்றும் விளைபொருட்களைப் பாதுகாக்கவும் பல முக்கியத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ரூ.7.10 கோடியில் 3 புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள்:

மாநிலத்தில் விதை சுத்திகரிப்புத் திறனை அதிகரிக்கும் நோக்கத்துடன், 3 முக்கிய இடங்களில் தலா 250 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட விதை சேமிப்புக் கிடங்குகளுடன் கூடிய புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

அமைக்கப்படும் இடங்கள்:

சேலம் மாவட்டம் (கங்கவல்லி), தூத்துக்குடி மாவட்டம் (கிள்ளிகுளம்) மற்றும் விழுப்புரம் மாவட்டம் (இருவேல்பட்டு).

நிதி ஒதுக்கீடு:

ரூ. 7 கோடி 10 லட்சம் (மாநில நிதி).

சர்க்கரைத் துறை: கரும்பு விவசாயிகளுக்குச் சிறப்புச் சலுகைகள்:

கரும்பு சாகுபடிச் செலவைக் குறைக்கவும், உற்பத்தியைப் பெருக்கவும் இரண்டு முக்கிய மானியத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

விதைக்கரும்பு மானியத் திட்டம் (ரூ.9.36 கோடி):

இயந்திர அறுவடைக்கு ஏற்ற அகலப்பார் முறையில் உயர் விளைச்சல் மற்றும் உயர் சர்க்கரைச் சத்து கொண்ட கரும்பு ரகங்களைச் சாகுபடி செய்ய முன்வரும் கூட்டுறவு/பொதுத்துறை சர்க்கரை ஆலை விவசாயிகள் பயன்பெறுவர். இவர்களுக்கு 50% மானியத்தில் பருசீவல் நாற்றுகள் மற்றும் ஒரு பரு விதைக்கரணைகள் வழங்கப்படும். இத்திட்டம் 17,315 ஏக்கர் பரப்பளவில் செயல்படுத்தப்படும்.

கரும்பு சாகுபடி மேம்பாட்டுத் திட்டம் (ரூ. 9 கோடி):

வல்லுநர் விதைக்கரும்பு, திசு வளர்ப்பு நாற்றுகள், சோகை உரித்தல், நிழல் வலைக்கூடம் அமைத்தல், சோகை தூளாக்குதல் மற்றும் நுண்ணூட்டச் சத்து-உயிர் உரங்கள் வழங்க மத்திய-மாநில அரசுகளின் பங்களிப்புடன் ரூ.9 கோடி மானியம் வழங்கப்படும்.

எத்தனால் உற்பத்தி ஆய்வு (ரூ. 20 லட்சம்):

கள்ளக்குறிச்சி-1, கள்ளக்குறிச்சி-2 மற்றும் செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் கூட்டமைப்பில், நாளொன்றுக்கு 100 கிலோ லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட எத்தனால் வடிப்பாலை அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) மற்றும் சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தோட்டக்கலைத் துறை: ரூ.22 கோடியில் வெங்காய சேமிப்பு கிடங்கு:

காய்கறிகள், பழங்கள் மற்றும் தோட்டக்கலை பயிர்களின் உற்பத்தியைப் பெருக்கவும், விவசாயிகள் தொடர்ந்து வருமானம் பெறவும் தோட்டக்கலைத் துறை மூலம் பல திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

அறுவடைக்குப் பின் வெங்காயம் அழுகி வீணாவதைத் தடுத்து, விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைப்பதை உறுதி செய்ய '57,000 மெட்ரிக் டன்' கொள்ளளவு கொண்ட வெங்காய சேமிப்புக் கிடங்குகள் ரூ.22 கோடி நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படும்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com