4 மணி நேரம் தொடர் மின்வெட்டு- ஆவடியில் விடிய விடிய மறியல், பொதுமக்கள் போராட்டம்

மின்வாரிய ஊழியர்கள் சிலர் குடிபோதையில் இருந்ததாகப் பொதுமக்கள் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டை தெரிவித்தனர்.
Public protest
பொதுமக்கள் போராட்டம்
Published on
power cut
மின்சாரம் நிறுத்தம்

ஆவடி வீட்டு வசதி வாரிய பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் நேற்று நள்ளிரவு 2 மணி முதல் தொடர் மின்வெட்டு ஏற்பட்டது.

மின்தடை

கோடை வெயில் குறையாத நிலையில், நள்ளிரவில் ஏற்பட்ட இந்த திடீர் மின்தடையால் குழந்தைகள், முதியவர்கள் எனப் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பல மணி நேரம் கடந்தும் மின் விநியோகம் சீராகாததால் பொதுமக்கள் ஆத்திரம் அடைந்தனர். மின்வெட்டு குறித்து மின்வாரிய அலுவலகத்திற்குத் தொடர்பு கொண்டும் முறையான பதில் கிடைக்காததால், பொறுமையிழந்த பொது மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் அதிகாலையிலேயே வீடுகளை விட்டு வெளியேறினர்.

பொதுமக்கள் முற்றுகை
பொதுமக்கள் முற்றுகை

சாலை மறியல்

அவர்கள் ஆவடி - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஜே.பி. எஸ்டேட் சந்திப்பில் திரண்டு, திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த சாலையில் போக்குவரத்து கடுமையாகப்பாதிக்கப்பட்டது.

குடிபோதை

அதே நேரத்தில், மற்றொரு தரப்பினர் ஆவடி வீட்டு வசதி வாரிய பகுதியில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தை முற்றுகையிட்டனர். மின்வெட்டை ஏன் இன்னும் சரி செய்யவில்லை எனக் கேட்டு அங்கிருந்த ஊழியர்களிடம் கடுமையான வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது இரவுப் பணியில் இருந்த மின்வாரிய ஊழியர்கள் சிலர் குடிபோதையில் இருந்ததாகப் பொதுமக்கள் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டை தெரிவித்தனர். இதனாலேயே மின் வெட்டு நீண்ட நேரம் நீடித்தததாக கூறி அதிகாரிகளை உடனடியாகப் பணி இடமாற்றம் செய்ய வேண்டும் என கோரினார்கள்.

போலீசார் சமாதானம்

இதுபற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆவடி போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடமும், மின் நிலையத்தை முற்றுகையிட்டவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். “மின்விநியோகம் விரைவில் சீரமைக்கப்படும், ஊழியர்கள் மீதான புகார் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும்” எனப் போலீசார் உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனைத் தொடர்ந்து, காலையில் புதிய ஷிப்ட் பணிக்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் உடனடியாகப் பணியில் ஈடுபட்டு, பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சார விநியோகத்தைச் சீரமைக்கும் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

4 மணி நேர மின் வெட்டில் ஆவடி பொது மக்கள் மிகவும் சிரமத்தை சந்தித்தனர். இதனால் நள்ளிரவில் தொடங்கிய மறியல் போராட்டம் விடிய விடிய நீடித்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com