

சென்னை மாநகராட்சியில் 387 கி.மீ. நீளம் கொண்ட 471 பேருந்து தட சாலைகள் உள்ளன. 5 ஆயிரத்து 270 கிமீ நீளம் கொண்ட 34 ஆயிரத்து 640 உட்புற சாலைகளும் உள்ளன. பேருந்து தடச் சாலைகளை மாநகராட்சி தலைமையகத்தில் உள்ள சாலைத்துறை பராமரித்து வருகிறது. உட்புற சாலைகள் அந்தந்த மண்டலங்கள் மூலமாக பராமரிக்கப்பட்டு வருகின்றன.
மயிலாப்பூர், ராயப்பேட்டை பகுதியில் செல்லும் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையை மாநகராட்சி சாலைத்துறை நேரடியாக பராமரித்து வருகிறது. இந்த சாலை கருணாநிதி முதலமைச்சராக இருந்த காலத்தில் இருந்தே வி.ஐ.பி.க்கள் செல்லும் சாலையாக இருந்து வருகிறது. ஜெயலலிதாவும், கருணாநிதியும் மாறி, மாறி முதலமைச்சராக இருந்தபோது பயணித்த சாலை இது.
இந்த சாலையில் இன்று காலை நீல்கிரிஸ் சிக்னல் அருகே 20 அடி நீளம், 4 அடி ஆழம், 4 அடி அகலத்துக்கு திடீரென பள்ளம் ஏற்பட்டது.
இந்த பாதையில் மெட்ரோ பணிகள் எதுவும் நடைபெறாத நிலையில் ஏற்பட்ட இந்த பள்ளம் அப்பகுதி மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைவு மெட்ரோ ரெயில் பணிகளை மேற்கொள்ளும் பணியாளர்கள், நெடுஞ்சாலை துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
பள்ளத்தை சரி செய்ய ரெடிமிக்ஸ் எந்திரம் வரவழைக்கப்பட்டது. இதையடுத்து சிறிது நேரத்தில் பள்ளம் மூடப்பட்டது.
சிமெண்ட் கலவை காய்வதற்கு குறைந்தபட்சம் 4 மணி நேரம் ஆகும் என்பதால் ராதாகிருஷ்ணன் சாலையில் 100 மீட்டர் தூரத்துக்கு ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டு, போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. விடுமுறை தினம் என்பதால் பெரும் விபத்தும், போக்குவரத்தில் பாதிப்பும் ஏற்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
எனினும் சாலையில் இவ்வளவு பெரிய அளவிலான பள்ளம் எப்படி ஏற்பட்டது? அதற்கான காரணங்கள் என்ன? என்று அதிகாரிகளால் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.